Mai 6, 2024

இலங்கை விமான சேவையின் நியாயமற்ற கட்டணங்களால் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மிகவும் சிரமத்தில்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர இலங்கை விமான சேவை அசாதாரணமாக அதிக கட்டணங்களை அறவிடுவதால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது.

இலங்கை விமான சேவை சாதாரண கட்டணங்களுக்கு மாறாக சில நேரங்களில் நான்கு மடங்கு அதிகமான கட்டணங்களை அறவிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதன்படி அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வர 2200 அமெரிக்க டொலரும், லண்டனிலிருந்து கொழும்பிற்கு வர 2200 பவுனும் லெபனானில் இருந்து இலங்கைக்கு வர ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாவும் என்ற வகையில் அதிகளவான கட்டணங்கள் நியாயமற்ற முறையில் அறவிடப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இலங்கைக்கு நாடு திரும்புவோர் கடந்த சில மாதங்களில் வெளிநாடுகளில் தொழில் இன்றி சிரமப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலுள்ள ஏனைய அனேகமான நாடுகள் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த தமது நாட்டு பிரஜைகளை இலவச விமான சேவை மூலம் நாட்டுக்கு திருப்பி அழைத்தது. ஆனால் இலங்கை விமான சேவை இந்த அசாதாரண சூழ்நிலையிலும் அதிகளவு பணம் வசூலிப்பதை நோக்காகக் கொண்டு செயல்படுகிறது.

இதேவேளை பணத்தை மாத்திரமே நோக்கமாகக் கொண்டு தீர்மானங்களை எடுத்து செயல்படும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர் அதிகாரிகள் தற்போதைக்கு குறித்த விமான சேவையில் பணியாற்றும் 1500 ஊழியர்களை கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பி உள்ளது.

இந்நிலையில் சில தொழிற்சங்கங்கள் சேவையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு பதிலாக நிர்வாகத்திற்கு ஆதரவு வழங்கி நிர்வாகம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.