Mai 5, 2024

2020 ஆம் ஆண்டு முடியும் வரை அவுஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் – வர்த்தகத் துறை அமைச்சர்

2020 ஆம் ஆண்டு முடியும் வரை அவுஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் -  வர்த்தகத் துறை அமைச்சர்

2020 ஆம் ஆண்டு முடியும்வரை அவுஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் என்று அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் அவற்றின் அன்றாடச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலுமாக முடங்கியுள்ளன. கொரோனா பரவலை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் எல்லை மூடலைப் பின்பற்றி வருகின்றன.

இந்தச் சூழலில் அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. எனினும் சில விலக்குகளையும் அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய வர்த்தகத் துறை அமைச்சர் பிர்மின்கங் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “வெளிநாடுகளிலிருந்து திரும்பும் அவுஸ்திரேலியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலைத் தடுத்து வருகிறோம். அவுஸ்திரேலியாவில் எல்லை மூடல் 2020 ஆம் ஆண்டுவரை தொடரும். எனினும் இதிலிருந்து சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் 7,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,859 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போது வரை கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.