Mai 7, 2024

வெளியே வருகிறார் சசிகலா? வருவதால் கலகலக்கும் அதிமுக… வெளியான முக்கிய தகவல்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவரை எதிர்கொள்வது குறித்து 3 அமைச்சர்கள் தங்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவரை எதிர்கொள்வது குறித்து 3 அமைச்சர்கள் தங்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா அதிகாரத்தில் இருந்த போது அவரது வரவு செலவு கணக்குகளை பார்த்த முக்கியமான 3 அமைச்சர்கள் தான் இந்த ஆலோசனையை நடத்தியவர்கள்.

இந்த மூன்று பேரும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எந்த நேரத்திலும் சென்று வரும் அளவிற்கு செல்வாக்குடன் திகழ்ந்தவர்கள்.

அதிலும் சசிகலாவிற்கு இவர்கள் மிக மிக நெருக்கம். தனது உறவினர்களை காட்டிலும் இந்த மூன்று அமைச்சர்களைத்தான் சசிகலா அதிகம் நம்பியதாக கூட கூறுவார்கள்.

ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு இந்த மூன்று பேரும் அப்படியே அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டனர்.

இந்த நிலையில் விரைவில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். அவர் வந்த உடன் தான் அதிகாரத்தில் இருந்த போது தன்னால் அதிக பலன் அடைந்தவர்களைத்தான் குறி வைத்து காய் நகர்த்துவார் என்று யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும் அமைச்சர்கள், அதிமுக முக்கியஸ்தர்கள் குறித்து அவர்களின் மனைவிகளுக்கே தெரியாத ரகசியங்கள் கூட சசிகலாவுக்கு தெரியும்.

சிலரின் அந்தரங்க விஷயங்கள் அடங்கிய வீடியோ டேப்புகள் கூட கார்டனில் இருந்ததாகவும் தற்போது அதனை சசிகலா பத்திரப்படுத்தி வைத்துள்ளதாகவும் கூட கூறப்படுவதுண்டு.

மேலும் அமைச்சர்களின் வரவு செலவு எங்கு வரை சென்று வரும் என்கிற லைனும் சசிகலாவுக்கு அத்துப்படி.

இந்த 3 ஆண்டுகளில் அதனை ஓரளவிற்கு மாற்றிவிட்டாலும் கூட சசிகலாவால் தற்போதும் கூட அந்த அமைச்சர்கள் 3 பேரின் செயல்பாடுகளை மோப்பம் பிடித்துவிட முடியும் என்று கூறுகிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாமல் கடந்த சில மாதங்களாகவே அந்த அமைச்சர்கள் மூன்று பேரையும் சசிகலா தனது பழைய செல்வாக்கை பயன்படுத்தி வேவு பார்த்து வருவதாகவும் கூட பேச்சுகள் அடிபடுகின்றன.

இப்படியான சூழலில் தான் அந்த மூன்று அமைச்சர்களுக்கும் கட்சி மேலிடத்தில் இருந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த உத்தரவுகளின் அடிப்படையில் மூன்று அமைச்சர்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து சசிகலாவை சமாளிப்பது எப்படி என்று ஆலோசித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

மேலும் சசிகலா தொடர்பு மூலம் கிடைத்த பலன்கள், பயன்கள் என அனைத்தையும் பட்டியல் போட்டு ஒரு வேளை அவர் வந்த பிறகு அது தொடர்பாக கேட்கப்பட்டால் விளக்கம் அளிக்கும் வகையில் கூட தயாராக இருக்க மூன்று அமைச்சர்களும் முடிவெடுத்துள்ளதாகவும் தேவையில்லாமல் தேர்தல் சமயத்தில் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பது மட்டும் தான் அந்த அமைச்சர்களின் எண்ணமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அதே சமயம் எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் என்று முதலமைச்சர் கூறி வருவதால் சசிகலாவை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் அந்த அமைச்சர்களுக்கு சிலர் ஆலோசனை கூறி வருகிறார்களாம்.

எது எப்படியோ சசிகலா விடுதலை ஆகப்போகிறார் என்கிற தகவலே அதிமுகவில் சிலருக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் வெளியே வந்த பிறகு என்னென்ன நடக்கப்போகிறதோ என்று அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.