Juni 14, 2024

ஈழவேந்தன் ஐயா கனடாவில் Toronto Western மருத்துவமனையில் காலமானார்.

“ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற குரல் இன்று ஓய்ந்து விட்டது.

கனகேந்திரன் என்ற தனது இயற்பெயரை தூய தமிழில் ஈழவேந்தன் என மாற்றிய தமிழ் மொழிப் பற்றாளர். எனது மகளிற்கும் தமிழினி எனப் பெயர் சூட்டியவர்.

நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதி அவர்களின் மகனான ஐயா யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை இருந்தவர்.

இவரின் துணைவியார் அருளாம்பிகை அம்மா சுகயீனமுற்ற நிலையில் தமிழகத்தில் மகளோடு வாழ்கிறார்.

“நீ ஒரு போராளியின்ட மனைவி! கலங்க்கக் கூடாது சரியோ! தைரியமாக திமிறாக இருக்க வேணும் சரியா!”

2010 களில் எங்கள் வீட்டிலிருந்தபோது மனைவிக்கு தொலைபேசியில் இவ்வாறு அதட்டி ஆளுமையோடு சத்தமாக ஆறுதல் சொல்லும் அழகே தனி!

இனத்திற்காக இறுதிவரை உண்மைக் குரலாகவும் உணர்வுள்ள எழுத்தாகவும் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தார்..

இவருக்கு இரு மகள்கள் உண்டு. பிள்ளைகளைப் பிரிந்து கனடாவில் தனியாக வாழ்பவரைப் பார்த்து நாம் கவலைப்பட்டால் “என் இனப் பிள்ளைகள் இங்கும் இருக்கிறார்கள் .. எனக்கென்ன கவலை?” என்பார்.

சில காலம் எங்கள் வீட்டில் வாழ்ந்தபோது “குழந்தாய்” என அன்பாக அழைத்து நல்ல அறிவுரைகள் பல சொல்லிக் கொண்டேயிருப்பார்.

அவரிடம் வரலாற்றை அறிந்து கொள்வதில் மணிக்கணக்காக மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பேன். இன்னும் கற்றிருக்கலாம்..

தனித் தமிழ்ச் சொற்களை வானொலியில் பேசு என ஊக்குவிப்பார்.

ஆயிரம் நூல்கள் கரைத்துக் குடித்த அறிவுப் பெருக்கு ஊற்றாக அருவியாக காட்டாறாக கடலாக பெருகி ஓடும்…வீடு முட்ட நிரம்பி வழியும் நூல்கள்…

அவசர உலகில் எமக்குத் தான் எதற்கும் இங்கே நேரம் இருப்பதில்லை..

வானொலியில் ஐயாவை அழைத்துப் பேச விட்டாலும் நிறுத்த மாட்டார்… “நேரம் போகிறது ஐயா!” என கண்டிப்பாக இழுத்து நிறுத்தும் சூழ்நிலை.. ஒலிபரப்பாளராக எனக்கு..

நேயர்கள் குறைப்படுவார்கள்.. “ஐயாவை இன்னமும் பேச விடுங்கள்!”என்று..

இன்று அந்த அறிஞரின் உயிரே எம்மை பிரிந்து போய்விட்டது.. ஓயாமல் பேசிய வாய் ஓய்ந்து போனதே!

“எனது நண்பன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டான்!” என ஏங்கல்ஸ் கார்ல் மார்க்ஸ்ஸின் இறப்புப் பற்றிச் சொன்ன வரிகள் நினைவில் வருகின்றன..

ஈழவேந்தன் என்ற தமிழினத்தின் விடுதலைக்காக அயராமல் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த அடங்காத் தமிழன் சிந்தைகள் இனி இயங்கப் போவதில்லை…

என்னே கொடுமை!

நேற்று அவரைச் சென்று பார்க்க எடுத்த எனது முயற்சி பாழாய்ப் போன வேலைப் பழுவால் பாழானது..வேதனையே!!

உறுதி குலையாத கொள்கையோடு முழங்கும் சமரசம் இல்லாத சண்டைக்காரனான ஈழவேந்தன் ஐயாவின் இழப்பு தமிழினத்திற்கு கொடிய துயர்!

கொள்கை பிழைத்த பிணங்கள் கண்முன்னே அரசியல் தலைமைகளாக வியாபாரம் செய்து நடமாடுகையில் உறுதியான தமிழீழ வேட்கை கொண்ட உங்களை நோய் கொண்டு போனது வேதனையே!

ஆழ்ந்த இரங்கல்கள்🙏🙏🙏

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert