Mai 2, 2024

முற்றுகை பீதியில் இந்தியப் படைகள்

புலிகளுடன் சண்டைகள் மூழும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும், அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்தனர்.

ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவு இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த பரசூட் தரையிறக்கத் தாக்குதல் நடவடிக்கை மட்டும் இந்தியப் படையினர் நினைத்தபடி வெற்றிகரமாக முடிந்திருந்தால், அவர்களது எண்ணம் ஈடேறியிருக்கும்.

ஆனால் புலிகளின் எதிர்த் தாக்குதலும், அதில் புலிகள் அடைந்திருந்த வெற்றியும் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தமது யாழ் முற்றுகையின் இரண்டாம் கட்டத்திற்கு செல்வதற்கு முற்பட்ட போதிலும், அதுவும் அவர்களுக்கு ஈடேறவில்லை.

 பல தமிழ் மக்கள் உயிரிழப்பு

யாழ் கோட்டையில் இருந்து நகர்வினை மேற்கொண்டு யாழ் நகரைக் கைப்பற்றுவதும் அவர்களுக்கு முடியாது போயிருந்தது.

யாழ் கோட்டை வாயில்களை அடுத்து புலிகள் அமைத்திருந்த பலமான கட்அவுட் நிலைகள் இந்தியப் படையினரின் எந்தவொரு நகர்வினையும் சாத்தியமற்றதாக்கியிருந்தது.

யாழ் கோடைக்குளிருந்த இந்தியப் படையினர் வெளியே நகரமுடியாது தவித்ததானது, அவர்கள் ஒரு முற்றுகைக்குள் உள்ளானது போன்ற ஒரு பீதியை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

யாழ் கோட்டைக்குள் அடைபட்ட நிலையில் இருந்த இந்தியப்படையினரைப் பொறுத்தவரையில் இதுபோன்ற ஒரு அனுபவம் அவர்களுக்கு முன்னெப்போதுமே ஏற்பட்டதில்லை.

முகாமொன்று பூரண முற்றுகைக்கு உள்ளாகி, அந்த முகாமிற்குள் அடைபட்டிருந்த அனுபவம் இந்தியப் படையினருக்கு முன்னெப்போதும் ஏற்பட்டதேயில்லை.

முற்றுகை பீதியில் இந்தியப் படைகள் | Ltte War Tigers Jaffna Sri Lanka Army Indian Hindi

அதுவும் வேற்று நாடொன்றில் இவ்வாறு அநாதரவாக விடப்பட்டது போன்றதொரு நிலை அவர்களை கதி கலங்க வைத்தது. போதாததற்கு கோட்டையில் தங்கியிருந்த சிறிலங்காப் படையினரும் புலிகள் பற்றியும், தமிழ் மக்கள் பற்றியும் இந்தியப் படையினரின் பயத்தை அதிகரிப்பது போன்ற கதைகளை அவிழ்த்து விட்டிருந்தார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் இருந்து ஒரு காரியத்தை மட்டும் ஒழுங்காகச் செய்தார்கள்.

யாழ் நகரிலுள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சகட்டுமேனிக்கு செல் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அங்கிருந்த சிறிலங்காப் படையினரும் அதற்கு உற்சாகம் வழங்கினார்கள்.

விழைவு பல தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள்.நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. தமிழ் மக்கள் மறுபடியும் ஒரு அகதி வாழ்க்கையை நோக்கிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

படுகொலைகளின் அத்தியாயங்கள்

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கும், யாழ் கோட்டையினுள் அடைபட்ட நிலையில் புலிகளின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த இந்தியப் படையினரை மீட்பதற்கும், புலிகளை ஒழிப்பதற்கும் என்று இந்தியப் படையினர் பாலாலியில் இருந்து பல முனைகளிலும் நகர்வுகளை ஆரம்பித்திருந்தது பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்திருந்தோம்.

ஒரு பாதையூடாக நகர்வினை மேற்கொண்ட இந்தியப் படையினரின் ஒரு பிரிவு உரும்பிராய் பிரதேசத்தை வந்தடைந்தபோது மற்றொரு அனர்த்தம் நிகழ்ந்தது. பாதையூடாக நகர்வினை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானார்கள்.

அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் படுகொலைகளின் அத்தியாயமொன்று தமிழ் மக்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டது. கன்னிவெடிச் சம்பவத்தை அடுத்து இந்திய இராணுவத்தினர் கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றார்கள்.

முற்றுகை பீதியில் இந்தியப் படைகள் | Ltte War Tigers Jaffna Sri Lanka Army Indian Hindi

பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பலவும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. அச்சத்தின் காரணமாக வீடுகளைப் பூட்டிவிட்டு வீட்டினுள்யே மறைந்திருந்தவர்களை, கதவுகளை உடைத்துக்கொண்டு உட் சென்ற இந்;தியப்படையினர் சுட்டுக்கொன்றார்கள்.

உரும்பிராய்; பிரதேசத்தில் ஒரு 93 வயது மூதாட்டி உட்பட நான்கு பெண்கள் தங்கியிருந்த ஒரு வீட்டினுள் புகுந்த இந்தியப் படையினர் அங்கிருந்த நான்கு பெண்களையும் கொடூரமாகச் சுட்டுக் கொண்றார்கள்.

நோய் காரணமாக படுக்கையில் இருந்த மூதாட்டி கட்டிலில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். மற்றய இளம் பெண்களின் சடலங்கள் வீட்டின் பின்பகுதியில் இருந்து பின்னர் கண்டெடுக்கப்பட்டன.

பெண்களின் சடலங்கள்

உரும்பிராய் சந்திக்கு வடக்கே ஐம்பது யார் தொலைவில் இலங்கை திருச்சபைக்கு எதிரே இருந்த பொன்னம்பலம் என்பவருக்குச் சொந்தமான வீடொன்றினுள் அயலில் வசித்த சிலர் அடைக்கலம் தேடிச் சென்றிருந்தார்கள்.

ஆசிரியரான பஞ்சாட்சரம் என்பவருடைய குடும்பம், வேம்படி மகளிர் கல்லூரி மாணவியாக பிரேமா, அவரது தாயான திருமதி சின்னத்துரை போன்றவர்களும் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்திருந்தார்கள்.

பொன்னம்பலத்தின் குடும்பத்தினர், மற்றும் அடைக்கலம் தேடி வந்தவர்கள் என்று மொத்தம் 11 பேர் அங்கு தங்கியிருந்தார்கள். அந்த வீட்டை சூழ்ந்துகொண்ட இந்தியப் படையினர், வீட்டில் தங்கியிருந்த அனைவரும் உடனடியாக வெளியே வரவேண்டும் என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உத்தரவு பிறப்பித்தார்கள்.

முற்றுகை பீதியில் இந்தியப் படைகள் | Ltte War Tigers Jaffna Sri Lanka Army Indian Hindi

வெளியே வராவிட்டால் வீட்டையே குண்டுவீசித் தகர்த்துவிடப் போவதாகவும் எச்சரித்தார்கள். வேஷ்டி ஒன்றைக் கிழித்து வெள்ளைக் கொடி தயார் செய்த பொன்னம்பலம், அந்தக் கொடியை கையில் ஏந்தியபடி வீட்டை விட்டு வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து வீட்டிலிருந்த மற்றவர்களும் வெளியே வந்தார்கள்.

பையர் என்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. திருமதி சின்னத்துரை, பொன்னம்பலம் தவிர மற்றவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.

திருமதி சின்னத்துரையின் கணவர் தனது மனைவியையும், மகள் பிரேமாவையும் பாதுகாப்பாக பொன்னம்பலத்தின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, உரும்பிராய் சந்தியிலிருந்த தனது வீட்டியேயே தங்கியிருந்தார்.

கவலைப்படாதேயும் அவையள் சண்டை பிடிக்கவந்த இராணுவத்தினர் இல்லை. அவையள் அமைதிகாக்கும் இராணுவத்தினர். நான் அவர்களுக்கு விளங்கப்படுத்துவேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலேயே தங்கிவிட்டார்.

அவரும் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். வயது முதிந்தவர்களும், பெண்களும், குழந்தைகளுமே இப்பிரதேசத்தில் அனேமாகக் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இளைஞர்கள் ஏற்கனவே அப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இருந்ததால், இளைஞர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் குறைவு என்றே கூறவேண்டும்.

தொடர்ந்த கொலைகள்

உரும்பிராய் வடக்கில் பல்கலைக் கழக மாணவியான அம்பிகா, தனது தாயார், வயதான பாட்டி, மலையகத்தைச் சேர்ந்த வேலைக்காரர் போன்றவர்களுடன் தங்கியிருந்தார்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி இந்தியப் படையின் யுத்த தாங்கி ஒன்று மிகுந்த இரைச்சலுடன் நகர்ந்து கொண்டிருந்தது.

அந்த தாங்கியின் பின்னே ஆயுதம் தரித்த இந்தியப் படை ஜவான்கள் அணிவகுத்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் கண்களில் கொலை வெறி தாண்டவமாடியது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert