Mai 2, 2024

உரும்பிராயில் எழுதப்பட்ட கொலைகளின் அத்தியாயங்கள்

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது.

இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும், ஜே.எஸ்.டிலானும் அந்தப் படைப்பிரிவை தலைமை தாங்கி வழி நடாத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்பிரதேசத்தில் இருந்த வீடொன்றில், யாழ் பல்கலைக்கழக மாணவியான அம்பிகா என்ற பெண்ணின் தாயாரும், பாட்டியும், மலையகத்தைச் சேர்ந்த வயதான வேலைக்காரர் ஒருவரும், மற்றொரு முதியவரும் வசித்து வந்தார்கள்.

அப்பிரதேசத்தில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, வீட்டைப் பூட்டிவிட்டு கட்டில்களின் கீழேயும், மேசைகளின் கீழேயும் மறைந்திருந்த அந்த முதியவர்கள், தங்களது வீட்டைக் கடந்து யுத்த தாங்கியும், இந்தியப் படையினரும் செல்வதை இரைச்சலின் மூலமும், பேச்சொலிகள் மூலமும் அறிந்துகொண்டார்கள்.

இந்த அரவங்கள் ஓய்ந்து சிறிது நேரத்தின் பின்னர், அந்த வீட்டில் இருந்த முதியவர் மெதுவாக எழுந்து வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று நிலமையை அவதானிப்பதற்கு எத்தனித்தார்.

உரும்பிராயில் எழுதப்பட்ட கொலைகளின் அத்தியாயங்கள் | Episodes Of The Murders Written In Urumbrai Srilan

அங்கிருந்த எவருமே இந்தியப் படையினருக்கு கொஞ்சமும் பயப்படவில்லை. சண்டைகளின் இடைநடுவில் சிக்குண்டுவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருந்ததே தவிர, சிறிலங்கா இராணுவம் போன்று இந்தியப் படையினர் அப்பாவி மக்களை கொலைசெய்துவிடுவார்கள் என்ற அச்சம் அங்கிருந்த முதியவர்களுக்கு சிறிதும் இருக்கவில்லை.

வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் எட்டிப் பார்த்த முதியவரை நோக்கி ஒரு துப்பாக்கிச் சன்னம் சீறிக்கொண்டு புறப்பட்டது. இந்திய யுத்த தாங்கியின் பின்னால் மறைந்தபடி வந்திருந்த படை வீரர்களில் சிலர் அப்பிரதேசத்தில் ஏற்கனவே பதுங்கி நிலையெடுத்திருந்தார்கள்.

அவர்களில் ஒருவனே முதியவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தான். எந்தவித சத்தமும் இடாது, அந்த முதியவர் சரிந்து கீழே வீழ்ந்தார். அதனைத் தொடர்ந்து மேலும் சில இந்தியப் படை வீரர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த அம்பிகாவின் தாயாரையும், பாட்டியையும் சுட்டுக்கொன்றார்கள்.

முதலாவது வெடிச் சத்தம் கேட்டதுமே நிலமையைப் புரிந்துகொண்டு மறைவிடம் ஒன்றினுள் பதுங்கிக்கொண்ட அந்த மலையக வேலையாள் மட்டும் உயிர் தப்பியிருந்தார்.

இந்தியக் கொலைகாரர்கள்

இந்தியப் படையினர் அப்பிரதேசத்தில் அந்த இரண்டு நாட்களிலும் மேற்கொண்ட கொலைகள் எண்ணில் அடங்காதவை. பல கொலைச் சம்பவங்கள் அங்கு இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அனேகமான சம்பவங்கள் பற்றிய செய்தியை வெளியே தெரிவிப்பதற்குக் கூட எவருமே மிஞ்சாத வகையில் பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அங்கு இடம்பெற்றிருந்தன.

அப்பிரதேச மக்கள் என்றுமே கண்டும், கேட்டும் அறிந்திராத அவலங்களை அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது. அப்பிரதேசத்தில் வசித்து வந்த சிவப்பிரகாசம் என்ற நபர், முறிந்த பனை என்ற நூலின் ஆசிரியர்களிடம் கூறும்போது,எனது வீடு அமைந்திருந்த அரை மைல் சுற்று வட்டாரத்திற்குள் மாத்திரம் 18 பொதுமக்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டார்கள்.

இவர்களில் ஏழு பேர் மட்டுமே ஆண்கள், அவர்களும் 60 வயதைக் கடந்திருந்தவர்கள் என்று தெரிவித்திருந்தார். நாற்பத்தேழு வயது வர்த்தகரான இலகுப்பிள்ளை ஏகாம்பரம், முப்பது வயதான அவரது மனைவி டொரத்தி, மூன்று வயது மகள் ஷெரீன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள்.

உரும்பிராயில் எழுதப்பட்ட கொலைகளின் அத்தியாயங்கள் | Episodes Of The Murders Written In Urumbrai Srilan

அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்து விழுந்து வெடித்த ஷெல்களால் அதிர்ச்சியுற்ற அவர்கள், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான கட்டிடம் ஒன்றில் தங்குவது நல்லது என்று நினைத்து வீட்டை விட்டு பின் வாசல் வழியாக வெளியே வந்தார்கள். அங்கு பதுங்கியிருந்த இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஏகாம்பரத்தின் வீட்டுக்கு அடுத்ததாக டொரத்தியின் மைத்துனி திருமதி சீனித்தம்பியின் வீடு இருந்தது. திருமதி சீனித்தம்பி, அவரது தாயார், அவரது சகோதரன், ஏழு வயதுக் குழந்தை ஒன்று என்று பலர் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்களது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த இந்தியப்படையினர் வீட்டில் இருந்த அனைவரையும் சுட்டுக்கொன்றார்கள்.

அவர்களது உடல்களையும், ஏற்கனவே கொல்லப்பட்டிருந்த ஏகாம்பரம் தம்பதிகளின் உடல்களையும், அருகில் காணப்பட்ட குழி ஒன்றினுள் போட்டு கிறவல் கற்களினால் மூடியிருந்தார்கள். சிறிது காலத்தின் பின்னர் அந்த குழியைத் தோண்டிய போது, ஏகாம்பரம் தனது குழந்தையை அணைத்தபடி எலும்புக்கூடாக காட்சியளித்ததாக ஊர்மக்கள் தெரிவித்தார்கள்.

இதேபோன்று அப்பிரதேசத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சோகச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. தங்களது இளம் பிள்ளைகளை பாதுகாப்பாக ஏற்கனவே வெளியே அனுப்பிவிட்டு வீடுகளில் தங்கியிருந்த வயது முதிந்தவர்களே அனேகமாக கொல்லப்பட்டிருந்தார்கள்.

வீடுகளுக்குள் நுழைந்த இந்தியப்படை வீரர்கள் அங்கு தங்கியிருந்த முதியவர்களை இரக்கம் இன்றிச் சுட்டுக் கொன்றிருந்தார்கள். அப்பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 இற்கும் அதிகம் என்று உத்தியோகப்பற்றற்ற கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காப் படைகளும் களத்தில்

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, இந்தியப் படையினரின் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு சிறிலங்காப் படையினரும் துணைபோயிருந்தது பற்றிய பல செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தியப் படையினர் யாழ்நகரை நோக்கி நகர்வதற்கு சிறிலங்காப் படையினரின் உதவிகளையும் பெற்றிருந்த விடயம் அப்பொழுது மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் நாட்டில் எதிர்ப்புக்கள உருவாகிவிடும் என்பதால் இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு சிறிலங்காப் படையினர் உதவிய விடயங்கள் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், இந்தியப் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிறிலங்காப் படையினர் பல சந்தர்ப்பங்களில் தம்மை மறந்த நிலையில் சிங்களத்தில் பேசிய தம்மை வெளிக்காண்பித்திருந்தார்கள்.

உரும்பிராயில் எழுதப்பட்ட கொலைகளின் அத்தியாயங்கள் | Episodes Of The Murders Written In Urumbrai Srilan

இந்தியப் படையினருக்கு வழி காண்பித்து அவர்களை அழைத்துச் சென்ற சிறிலங்காப் படையினருக்கு ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியாது, தமிழும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது சிங்களம் மட்டுமே. மற்றய சிறிலங்காப்படை வீரர்களுடன் அவர்கள் சிங்களத்தில் பேசியதை, வீடுகளில் மறைந்திருந்த பல தமிழ் மக்கள் கேட்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியப்படையினர் மேற்கொண்டிருந்த படுகொலை நடவடிக்கைகளுக்கு, தமிழ் மக்களின் ஜென்ம விரோதிகளான சிங்களப் படையினரையும் துணைக்கழைத்துச் சென்றதானது, ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட மிகப் பெரிய துரோகங்களுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert