Mai 9, 2024

அரசியலாகிய தடுப்பூசி? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

இலங்கைத்தீவில் மே மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அரைவாசிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். ஆனால் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் உரிய காலத்தில் கிடைப்பது சந்தேகமே என்று ஜே.வி.பி. கடந்த சனிகிழமை தெரிவித்துள்ளது.

இலங்கைத்தீவில் கடந்த திங்கட்கிழமை வரையிலும்  3.8.விகிதத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருக்கிறார்கள். 7.7 விகிதத்தினர் முதலாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருக்கிறார்கள். உலகில் இதுவரையிலும் அதிகதொகை மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது முதலாவதாக சீனாவில் இரண்டாவதாக அமெரிக்காவில் மூன்றாவதாக இந்தியாவில் நாலாவதாக பிரித்தானியாவில்.

கடந்த மார்ச் மாதம் இலங்கைத் தீவின் மேல் மாகாணத்தில் இருப்பவர்களுக்கு இந்தியத் தயாரிப்பான அஸ்ரா செனெக்கா வகைத் தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டது. மூன்று கிழமைகளின் பின் இரண்டாவது டோஸ் போடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ஏறக்குறைய நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. கிட்டத்தட்ட 5 லட்சத்து 75 பேர்களுக்கு இரண்டாவது கட்டத் தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை. வசதியுள்ளவர்கள் வாய் வல்லமையுள்ளவர்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு போய் தங்களுக்கு தெரிந்த மருத்துவர்களைப பிடித்து இரண்டாம் கட்ட ஊசியை பெற்றுக் கொண்டு விட்டார்கள். காலியில் அவ்வாறு ஒரு தொகுதியினர் அரசியல் அணைவையும் மேல்மட்டச் செல்வாக்கையும் பயன்படுத்தி இரண்டாவது டோசை பெற்றுக் கொண்டது குறித்து ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. கிளிநொச்சி மாவட்டத்திலும் பூநகரியில் ஒரு மருத்துவர் அவ்வாறு தனக்கு தெரிந்தவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை போட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதில் பாதிக்கப்படுவது யார் என்று கேட்டால் வாய் வல்லமை இல்லாத சாதாரண குடிமக்கள்தான். அவர்கள் தடுப்பூசி வருமா இல்லையா என்ற நிச்சயமின்மைகளோடு காத்திருக்கிறார்கள்.

மேல் மாகாணத்தில் இருப்பவர்களுக்கு முதலில் போடப்பட்ட அஸ்ரா செனெக்கா தடுப்பூசியை இந்தியா வழங்கியது. உலகில் மிகவும் மலிவான அதே சமயம் வினைத்திறன் மிக்க தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்கின்றது. உலகில் அதிகதொகை கொரோனாத் தடுப்பூசிகளை சீனாவே உற்பத்தி செய்கிறது. அதற்கடுத்ததாக அமெரிக்காவும் அதற்கடுத்ததாக ஐரோப்பிய யூனியனும் உற்பத்தி செய்கின்றன. இந்தியா நாலாவது இடத்திலுள்ளது

ஆனால் இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட்டில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாகவும் இந்தியாவில் திரிபடைந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியா திணறிக் கொண்டிருந்த காரணத்தாலும் இலங்கை அரசாங்கத்துக்கு அடுத்த கட்டமாக தடுப்பூசிகளைத் தர முடியவில்லை என்று ஒரு காரணம் கூறப்படுகிறது. வைரஸ் தொற்றினால் இறந்தவர்களை நதிகளில் வீசிக்கொண்டிருந்த ஒரு பின்னணியில் இந்தியா அயல்நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கக்கூடிய ஒரு நிலைமை இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இடையில் விக்னேஸ்வரன் வடக்கு கிழக்குக்கு இந்தியா தடுப்பூசிகளைத் தர வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கும் இந்தியா உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவில்லை.

இவ்வாறு தடுப்பூசிகளுக்காக காத்திருக்கும் மேல் மாகாண மக்களுக்கு அமெரிக்கா அவற்றை தந்து உதவ வேண்டும் என்று மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். ஆனால் அமெரிக்கா இன்றுவரையிலும் குறிப்பிட்ட வகைத் தடுப்பூசிகளை தருவதாக வாக்குறுதி எதையும் தரவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் அரசாங்கம் ஜப்பானிடம் உதவி கேட்டது. ஜப்பான் குறிப்பிட்ட வகை தடுப்பூசிகளை  இலவசமாகத் தரும் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த வாரம் கிடைத்த ஒரு செய்தியின்படி அதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவாகவே தெரிகின்றன. அஸ்ரா செனெக்கா தடுப்பூசிகளை யப்பான் ஏனைய நாடுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. குறிப்பிட்ட தொகை அஸ்ராஜெனிக்கா தடுப்பூசிகளை தந்து உதவுமாறு அரசுத்தலைவர் கோட்டாபய கொழும்பில் உள்ள ஜப்பானியத் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்..  அதைத் தொடர்ந்து வெளியான செய்திகளின்படி யப்பான் அந்த உதவியைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொழும்பில் உள்ள யப்பானிய தூதரகம் அதை மறுத்திருக்கிறது. அஸ்ரா செனெக்கா தடுப்பூசிகளை தருவதாக யப்பான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் மாறாக அரசாங்கத்தின் வேண்டுகோள் தமக்கு கிடைத்தது என்று மட்டுமே ஒரு செய்திக் குறிப்பை தாம் வெளியிட்டதாகவும் யப்பானியத் தூதரகம்  தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன.

அதேசமயம் இந்த வாரம் ஜப்பான் வியட்நாமுக்கு பத்து லட்சம் அஸ்ரா செனெக்கா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இதில் ஒரு இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு செய்தி இருக்கிறது. வியட்நாமுக்கு நன்கொடையாக வழங்கியது போல ஏன் இலங்கைத் தீவுக்கும் நன்கொடையாகத் தர முன்வரவில்லை?

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் ஜெயவர்த்தன ஐநா சபையில் யாப்பானுக்கு ஆதரவாக உரையாற்றியதிலிருந்து தொடங்கி இரண்டு நாடுகளுக்கும் இடையே அரசியல், பொருளாதார, பண்பாட்டு உறவுகள் மிகச் செழிப்பாக காணப்பட்டன. ஆனால் அண்மைக் காலங்களில் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ அரசுத் தலைவராக வந்தபின் யப்பானுடன்  தொடர்புடைய. இரண்டு விடயங்களில் அரசாங்கம் ஜப்பானை திருப்திப்படுத்தும் விதத்தில் நடக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. முதலாவது விடயம் ஜப்பானின் உதவியோடு கட்டப்பட்டவிருந்த அதிவேக மின்சாரத் தொடரூந்து சேவைத் திட்டம்.  இதை இலங்கை அரசாங்கம் இடையில் நிறுத்தி விட்டது.  ஏனெனில் இரண்டு நாடுகளும் ஒத்துக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் பிரகாரம் அந்த வேலைகள் தொடங்கப்பட்டன. அவற்றை இடையில் திடீரென்று அரசாங்கம் நிறுத்தியதால் இதுவரையிலும் செலவு செய்யப்பட்ட தொகை என்று கூறி ஐநூறு கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக ஒரு தொகையை உடன்படிக்கையில் சம்பந்ப்தபட்ட ஜப்பானிய நிறுவனம் கேட்கிறது.

அதைப்போலவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து புனரமைப்பதற்காக ஓர் உடன்படிக்கை சில ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. ஆனால் கோட்டாபயவின் அரசாங்கம் அந்த உடன்படிக்கையை கைவிட்டுவிட்டது. இதனாலும் யப்பான் இலங்கை அரசாங்கத்தின் மீது அதிருப்தியுற்றிருக்கிறது.

இவை தவிர கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜப்பானில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்திவிட்டது. இதுவும் ஜப்பானை விலகி நிற்க வைத்த ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறாக இலங்கை அரசாங்கத்தின் ராஜீய அணுகுமுறைகள் காரணமாக யப்பான் சந்தோசமாக இல்லை என்பதனால்தான் இலங்கைக்கு நன்கொடையாக தடுப்பூசிகளை தருவதற்கு இன்று வரையிலும் முன்வரவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு நாட்டின் தலைநகரம் அமைந்திருக்கும் ஒரு மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி இரண்டாம் கட்டத் தடுப்பூசிகளை போட முடியாதபடி இலங்கை தத்தளிக்கிறது. இதற்குக் காரணம் இலங்கைத்தீவின் ஒரு பக்கச் சார்பான வெளியுறவுக் கொள்கைதான் என்று ஒரு பகுதி விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதேசமயம் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி இதுவிடயத்தில் இலங்கைத்தீவின் சுகாதாரத் துறையும் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கட்டமைப்பும் தூர நோக்குடன் செயற்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. முதலில் கிடைத்த தடுப்பூசிகளை இரண்டாக பிரித்து இரண்டாவது டோசையும் போடக் கூடிய விதத்தில் ஒரு தொகுதியை சேமிப்பில் வைத்துக்கொண்டுதான் அரசாங்கம் மேல் மாகாணத்தில் முதற்கட்ட தடுப்பூசியை ஏற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. சீனா வழங்கிய தடுப்பூசிகளின் விடயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது முதல்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமும் ஏற்றவேண்டும் என்று சிந்தித்து உரிய தொகையை சேமிப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அதைத் திட்டமிட்டுச் செய்யத் தவறியிருக்கிறது.

இவ்வாறு தடுப்பூசிக்காகக் காத்திருப்பது என்பது தனிய ஒரு மருத்துவ விவகாரம் மட்டும் அல்ல. அதற்கும் அப்பால் அது ஒரு ராஜ்ய விவகாரமாகவும் காணப்படுகிறது.  இலங்கை அரசாங்கம் தடுப்பூசிகளையும் கெட்டித்தனமாக நிர்வகிக்கவில்லை. புவிசார் அரசியல் நிலவரங்களையும் வெற்றிகரமாக நிர்வகிக்கவில்லை. அதன் விளைவாக நாட்டு மக்கள் தடுப்பூசிகளுக்காகவும் காத்திருக்கும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று. அதாவது அஸ்ரா செனெக்கா இனிக் கிடைக்காது என்று பொருள்.