Mai 18, 2024

நீதி கோரும் தமிழர்கள்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஜேர்மனிய அரசாங்கத்தினை கோருவோம் !

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட மேலதிக காலநீடிப்பு எதிர்வரும் பெப்ரவரி-மார்ச் ஐ.நா கூட்டத் தொடரின் போது நிறைவு காண்கின்றது. புதிய தொரு தீர்மானம் வருவதற்கான நிலை தோன்றியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் என்ற மாயமானுக்கு நிலைமாறுகால நீதியின் பெயரால் சர்வதேச சமூகத்தினால் வழங்கப்பட்ட மேலதிக காலநீடிப்பு, தமிழர்களுக்கான நீதியினை தாமதிக்க வைத்திருந்தது மட்டுமல்லாது, சிறிலங்கா சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஓர் உத்தியாகவும் கையாண்டிருந்தது.

இக்காலத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திய சிறிலங்கா அரசு, ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகியது மட்டுமல்லாது, தீர்மானத்தின்பால் ஐ.நா அங்கத்துவ நாடுகளுக்கு ஒத்துக் கொண்ட விடயங்களை நிறைவேற்றாமல் காலத்தை கடத்தியது.

இந்நிலையில் சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் புதியதொரு தீர்மானத்தினை கொண்டுவருவதற்கான முனைப்பில் கூட்டுநாடுகள் ஈடுபட்டுள்ளன. இக்கூட்டு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனியும் ஒரு முக்கிய நாடாக இருக்கின்றது.

தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் ஆகிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்காவை பொறுப்புக் கூறவைக்க, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதே நீதிக்கான சர்வதேச பொறிமுறையாக இருக்கின்றது.

இனப்படுகொலையினை செய்தது ‚சிறிலங்கா அரசே‘, எனவே இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை உள்ளாக்க வேண்டியது , தனிப்பட்ட நபர்களுக்காக அல்ல. மாறாக ‚சிறிலங்கா அரசே‘ இதற்கு பொறுப்புக் கூறவேண்டும். ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் அறிக்கையில் ‚ திட்டமிடப்பட்ட குற்றங்கள்‘ என குறிப்பிட்டுள்ளார். அதவாது தற்செயலாக நடந்த குற்றங்கள் அல்ல. நன்கு திட்டமிடப்பட்ட குற்றங்கள் ஆகும் அவை.

ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையிலும் ‚சிறிலங்கா அரசே‘ இக்குற்றங்களை செய்தது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. எனவே சிறிலங்கா அரசினையே நாம் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். குற்றவாளிக்கூண்டில் என்பது சிறையில் அடைப்பதல்ல. அதற்கான ‚பொறுப்புக்கூறலேயாகும்.

பரிகார நீதியே (ஈடுசெய் நீதி) எமது மக்களுக்கான தீர்வாக அமையும். நிலைமாறுகால நீதியல்ல. நிலைமாறுகால நீதி என்பது , ஆர்ஜென்ரீனாவில் இருந்த அரசாங்கமொன்று மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தது. அதற்கு பின்னாக வந்த அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்தது. அதுதான் நிலைமாறுகால நீதியின் அடிப்படைக் கோட்பாடாகும். ஆனால் நிலைமாறுகால நீதி இனப்படுகொலைக்கு உள்ளான எமக்கு நீதியினை தராது.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் கூட்டுநாடுகளினால் கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானத்தில் நமக்கான பரிகாரநீதிக்கான செயல்வழிப்பாதையில் பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த கோருவோம்.

தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு, அச்சுறுத்தல்கள், போர்கைதிகள் விடுதலை (அரசியல் கைதிகள்) போன்ற மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் விடயங்களை ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் வைத்திருக்க கோருவோம்.

கூட்டுநாடுகளில் ஒன்றாக இருக்கின்ற ஜேர்மனியி அரசினை நோக்கி நீதிக்காய் ஒப்படமிட்டுவோம்……