Mai 2, 2024

அகதிகள் வருகையை தடுக்க இங்கிலாந்து – பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்

பிரான்சிலிருந்து ஆங்கில கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குள் படகு வழியாக அகதிகள் வருவதை குடியேறிகளை வருவதை தடுக்கும் விதமாக இங்கிலாந்து- பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தொழில்நுட்ப உதவியுடன் ஆபத்தான கடல் வழிப் பாதையில் படகுகளை தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரான்சிலிருந்து இங்கிலாந்தில் படகு வழியாக அகதிகள்/ குடியேறிகள் தஞ்சமடையும் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து பின்பற்ற வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் அறிவுரை வழங்கியிருந்தார். அதாவது படகு வழியாக வரும் அகதிகளை வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பும் ஆஸ்திரேலிய நடவடிக்கையை இங்கிலாந்தும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
படகுகளை திருப்பி அனுப்பும் சர்ச்சைக்குரிய கொள்கையை அறிமுகப்படுத்தியவராக அறியப்படும் டோனி அபோட், குடியேறிகள் இங்கிலாந்துக்கு வருவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, அவர்களை வர விடாமல் தடுப்பதே ஆகும் என அவர் தெரிவித்திருந்தார்.
படகு வழியாக நாட்டுக்குள் தஞ்சமடைய முயல்பவர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் நாடுகளில் முதன்மை நாடாக அறியப்படும் ஆஸ்திரேலியா, சுமார் 8 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான அகதிகளை கடல் கடந்த தடுப்பிலும், தடுப்பிற்கான மாற்று இடங்களிலும் சிறைப்படுத்தியிருக்கிறது. அந்த வழியில தனித்தீவில் அகதிகளை சிறைப்படுத்தும் திட்டத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த இங்கிலாந்து, எரிமலைத்தீவான Ascension தீவில் அகதிகளை சிறைப்படுத்த ஆலோசித்து வந்தது. இங்கிலாந்தின் இச்செயல்பாடு ஆஸ்திரேலியாவின் இனவாத அகதிகள் கொள்கையை
பின்பற்றும் செயல்பாடு என்ற விமர்சனம் கூட எழுந்திருந்தது.
இந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், இதுவரை 2,000 குடியேறிகள் சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கிற நிலையில் பிரான்ஸ்- இங்கிலாந்து இடையே படகு வழியாக வரும் அகதிகளை/ குடியேறிகளை தடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.