Mai 9, 2024

மூதேவி விளக்குமாறுடன் போன கதை?

யாழ்.போதனா வைத்தியசாலையில் போதிய வசதிகள் இல்லாவிட்டாலும் அவ்வாறு இருப்பதாக காண்பிப்பது அதிகாரிகளது வழமை.

யாழ்.போதனா வைத்தியசாலையில் போதிய வெண்டிலேற்றர்கள் இல்லாதிருப்பது தொடர்பில் முதலாம் கொரோனா அலை காலத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.

இதனை உண்மையாவென பார்வையிட அரச அமைச்சர் டக்ளஸ் வருகை தந்திருந்த போது அவரை திருப்திப்படுத்த அம்புலன்ஸ் வண்டிகளிலிருந்த வெண்டிலேற்றர்களை கழற்றி புகைப்படமெடுத்த இரகசியம் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் புதிய வெண்டிலேற்றர்கள் கூட இன்றி போதனா வைத்தியசாலைக்கு மேலதிகமாக கோப்பாய் கல்வியியல் கல்லூரியிலும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையினை திறந்துள்ளது நிர்வாகம்.

இதனிடையே கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கீழ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கான விசேட சிகிச்சை நிலையம் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கு நேற்று 18 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 18 பேரும் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்திலிருந்தபோது அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தில் எமது மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர்கள் அடங்கலாக அனைத்து உத்தியோகத்தர்களும் சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோப்பாய் விசேட மருத்துவ நிலையத்தில் 350 பேருக்கு சிகிச்சையளிக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் நிலையாக சாதாரணமாகத் தொற்றுக்குள்ளானவர்கள் வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் இந்த மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு பின் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

கோப்பாய் பிரதேசத்திலுள்ள மக்கள் எந்தவித பய பீதியடையத் தேவையில்லை. ஏனெனில் நோயாளர்கள் சரியான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டு தெல்லிப்பழையில் எரியூட்டப்படுகிறது.

அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இதுவரை சமூகத்தொற்று ஏற்படவில்லை. எதிர்வரும் காலங்களில் நடைபெறுபவற்றை சரியாக எதிர்வு கூறமுடியாது. பொதுமக்கள் சரியான விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சமூகத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளித்துள்ளார்.