Mai 6, 2024

இந்தியத் தூதர் – இரா.சம்பந்தன் திடீர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா இரா.சம்பந்தன் திடீரென இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவைச் சத்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள இந்தியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இந்தியத் தூதுவரே சம்பந்தன் அவர்களை அழைத்துப் பேச்சு நடத்தியதாகத் தெரியவருகிறது.

இலங்கை – இந்திய உறவுகள், சமகால அரசியல் நிலைவரங்கள், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்கள் உட்படப் பல தரப்பட்ட விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சந்திப்பு குறித்து சம்பந்தன் கருத்து வெளியிடுகையில்:-

இந்தச் சந்திப்பு மிகவும் முக்கிய சந்திப்பு. திருப்திகரமான சந்திப்பு. இதன்போது இரு நாட்டு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசினோம்.

அரசியல் தீர்வு முயற்சிகள், இந்தியாவின் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை அடுத்து ஏற்பட்டுள்ள விடயங்கள், புதிய அரசமைப்பு உருவாக்கம், இந்தியப் பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் போன்ற பல விவகாரங்கள் குறித்து பேசினோம்.

தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் என்னிடம் கேட்க வேண்டியவற்றை இந்தியத் தூதுவர் கேட்டறிந்தார். தமிழர் தரப்பில் கூற வேண்டிய விடயங்கள் அனைத்தையும் அவரிடம் நான் தெளிவுபடுத்திக் கூறினேன்.

இதேநேரம் வடக்கு, கிழக்கில் இந்திய முதலீட்டாளர்களின் முதலீடுகளை முன்னெடுப்பது குறித்து இந்தியா ஆர்வம் காட்டுகின்றது எனவும், வடக்கு, கிழக்கின் அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அது ஆயத்தமாக இருக்கின்றது.  இந்திய முதலீட்டாளர்களை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முதலீடுகள் செய்யவும், அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது பேசப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் 100 கோடி இந்திய ரூபா செலவில், 12 அடுக்கு மாடி கலாசார மண்டபக் கட்டடத் தொகுதி ஒன்று நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளது. குறித்த கலாசார மண்டபத் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தச் சந்திப்பின்போது இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.