Mai 9, 2024

பௌத்த மதத்திற்கே முன்னுரிமை

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர் மற்றும் வெடருவே உபாலி தேரர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

“நாட்டின் பொருளாதார நிலைமையை பார்க்கும் போது, வங்குரோத்து நாடு என்ற நிலையிலிருந்து நாம் மீண்டு வருகிறோம்.

வெளிநாட்டு கடன் நீடிப்பு வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான வேலைத்திட்டங்கள் பலவற்றையும் ஆரம்பித்துள்ளோம்.

புதிய தெரிவுடன் தொழில்நுட்பத்துடனும் முன்னோக்கிச் செல்லக்கூடிய தலைமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும்.

தாய்லாந்துடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.

அடுத்த வருடத்தின் பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரியுள்ளேன்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே நான் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன்.

பௌத்த மத தலங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

வடக்கில் குருந்தூர் விகாரையின் பிரச்சினையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வெளிப்பிரதேசங்களிலிருந்து எவரையும் அழைத்துவர வேண்டாம் என, அப்பகுதி சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ள நிலையில் வெளியிலிருந்து வந்த குழுவினரே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளனர்.

அது தொடர்பாக வவுனியா மகாநாயக்க தேரரையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அதனால் நாம் வெளியிலிருந்து அந்த பிரதேசத்திற்கு செல்வதற்கு எவரையும் அனுமதிப்பதில்லை.

அது தொடர்பிலான விடயங்களை கண்டறியுமாறு தொல்பொருளிலியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களம் வழங்கும் தீர்மானத்திற்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். அந்தப் பகுதிகளை பாதுகாக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

பௌத்த தலங்களை பாதுகாக்கும் அதேநேரம் தொல்பொருளிலியல் ஆய்வுகளை மேற்கொண்டு அப்பகுதிகளில் மற்றைய மதம் சார்ந்த பிரச்சினைகள் இருக்குமாயின் அதுபற்றி ஆராயவும் தயாராகவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert