Mai 9, 2024

மௌனம் ஆபத்து:சக்திவேல் அடிகளார்

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மிக அண்மைக்காலமாக காவி உடை தரித்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் தனிமனித சுதந்திரத்திற்கும், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கும், நிர்வாகத்திற்கும் பயங்கர அச்சசுறுத்தலாக அமைந்துள்ளதை  நாட்டின் சட்டம் அங்கீகரிக்கப் போகின்றதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் மாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது காவி உடைத்தவர்களின் பயங்கரவாத செயற்பாட்டினால்  கூட்டம் தடைப்பட்டுள்ளமையானது , தொடரப்போகும் காவி உடை தரித்தவர்களின் தீவிரவாதத்தை வெளிக்காட்டியுள்ளது.

அது நாட்டின் ஏனைய பிரதேசங்களின் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தலாகவும், பிழையான முன் உதாரணமாகவும் அது அமைந்துவிடப் போகின்றது. அத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தல்களை தொடர்ந்து அரசு அனுமதிக்க கூடாது.

நீதிக்கு அப்பாற்பட்டு  செயல்படுவோரை கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினர் தயங்குவதாக தோன்றுகின்றது. அல்லது அவர்களின் பின்னால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சிந்திக்க வைக்கின்றது.

விசேடமாக சமயத்தின் பெயராலோ இனத்தின் பெயராலோ இன்னுமொரு இனத்தினை அல்லது சமயத்தினை அவமதிப்பதும் முறுகல் நிலையை தோற்றுவிப்பதும் , அதற்கான கருத்துக்களை வெளியிடுவதும் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்வதும் கூடாது., அதற்காக மக்களை திரட்டுவதும், தொல்லியல் வரலாற்று சின்னங்களை அகற்றுவதும் அழிப்பதும் மறுப்பதும் கூட பயங்கரவாதமே. அதற்கு அரசு இடமளிக்கக்கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும் எனவும் சக்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert