Mai 2, 2024

பிரித்தானியாவில் உருவாக்கவுள்ள உலக தமிழர் வரலாற்று மைய – அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!!

பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபொர்ட் பகுதியில் நூற்று எட்டு (108) ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள உலக தமிழர் வரலாற்று மைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

முதல் மாவீரன் சங்கர் சத்தியநாதன்(சீலன்) அவர்களின் தந்தையார் தொடக்கிவைக்க நடுகற்கள் விதைப்பு ஆரம்பமானது அதனை தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் பெற்றோர்கள் நடுகற்களை விதைத்தார்கள். “தமிழில்லம்”அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த மாவீரர் பெற்றோர்கள் உறவுகள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள்.தமிழர்களுக்குச் சொந்தமான “தமிழில்லம்”நிமிர்ந்தெழப்போகின்றது என்ற மகிழ்ச்சியில் இருந்ததனை காணக்கூடியதாக இருந்தது.

உலகத் தமிழர் வரலாற்று மையமானது முழுமையாக பிரித்தானிய கம்பெனி சட்டம் 2006இற்கு அமைவாக இலாபநோக்கமற்ற அமைப்பாக 18. 06. 2015 பதிவு செய்யப்பட்டு பின்னர் தொண்டு நிறுவன சட்டங்களுக்கு அமைவாக ஒரு தொண்டு நிறுவனமாக பதியப்பட்டு பொறியியலாளர்கள், சட்டவாளர்கள், கணக்காளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்ட 11 அறங்காவலர்களுடன் செயற்பட்டு வருகின்றது.

உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்திற்குள் மாவீரர் பணிமனை, தமிழர் பண்பாட்டு நடுவம், மக்கள் நலன் காப்பகம், தமிழர் விடுதலை நடுவம், அற்புத விநாயகர் ஆலயம், அற்புத அந்தோணியார் ஆலயம் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் பிரித்தானிய சட்ட திட்டத்திற்கு அமைவாக பதிவுசெய்யப்பட்டு செயற்பட்டு வருகின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.

விழுமியங்களை பாதுகாக்கும் அதேவேளை, எமது கலைகளை வளர்த்தெடுக்கும் பாரிய பணியும் எமது தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த தலையாய கடமையை கண்முன் நிறுத்தி உலகத் தமிழருக்காக “உலகத் தமிழர் வரலாற்று மையம்” உருவாக்கப்பட்டுள்ளது.

Video Credit : Ananth

மேலும் எதிர்காலத்தில் அமையவுள்ள திட்டங்களான மாவீரர் அரங்கம், மாவீரர் நினைவாலயம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம், விளையாட்டுத்திடல், ஆலயம், 04 கிலோ மீற்றர் நீளமான நினைவு நடைபாதை, ஆவணக் காப்பகம், நூலகம், தமிழர் கலாச்சார மண்டபம், அரும்பொருட் காட்சியகம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, படகுத்துறை மேலும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக உலக தமிழர் வரலாற்று மைய நிர்வாகி தெரிவித்தார்.