Mai 2, 2024

பிரபல சென்னை டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு தண்டனை

சென்னையின் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி,  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்த போது, கூலிப்படை கும்பல் சரமாரியாக வெட்டியதில், தலை, கழுத்து, கை என 20க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரண்டேகால் ஏக்கர் நிலத்துக்காக சுப்பையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக, அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் (பட்டதாரி), முருகன் (சட்டக்கல்லூரி மாணவர்), செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினந்தோறும் நடந்தது. அரசுத் தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

சாட்சி விசாரணை, இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று அறிவித்தார்.

அவர் தனது தீர்ப்பில், பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையுடன் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.  மேரி புஷ்பம், ஏசுராஜன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதில், ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டதால் அரசு சாட்சியாக கருதப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.