April 27, 2024

கொழும்பு பயணிக்க யாழ்.பேரூந்துகளிற்கு தடை!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான  பஸ், ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாகவே அப் பஸ், திருப்பி அனுப்பப்பட்டது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் அமுலில் உள்ளது.

எனினும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பஸ் மற்றும் ரயில் சேவைகளுக்கு இன்று (14) தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதியளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று (14) அதிகாலை 5.45 மணிக்கு பஸ்ஸொன்று கொழும்பு நோக்கிப் பயணித்தது.

குறித்த பேருந்து வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், பயணித்தவர்களில் பலர் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர்.

அதனால், அத்தியாவசிய தேவைகளின்றி பயணிகளை ஏற்றிச் சென்றதாக அப்பஸ், ஈரப்பெரியகுளத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரணில்  சேவைகளில் பயணிப்போர் தமது கடமை அலுவலக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவ தேவைகளுக்குப் பயணிப்போர் அதுதொடர்பான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.