Mai 10, 2024

மன்னாரிலும் அவசர அழைப்பு?

மன்னார் மாவட்டத்தில் இது வரையில் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி ஆரம்பித்த பின்னர் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியிலும்,பேலியகொட மீன் தொகுதி கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய இருவர் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் தினங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் இருந்து மன்னாரிற்கு வந்த போக்குவரத்து விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த (ரத்னா ரவல்ஸ்) என்ற தனியார் பேரூந்தில் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் பஸ் நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி இலங்கை அரச பேரூந்தில் பயணத்தை மேற்கொண்ட பயணிகள் மற்றும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தான எச்.எஸ்.ரவல்ஸ் ஊடாக பயணித்த மக்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்.

இதில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இன்று வரை 995 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த 11 நபர்களும் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 2 பேர் சிகிச்சையின் பின்னர் இரனவல வைத்தியசாலையில் இருந்து தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.