Mai 4, 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் கருத்து!!!

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

20 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் செய்தி சேவை ஒன்று வினவிய போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சகல இனங்களுக்குமான தனித்துவத்தும் பேணப்படும் வகையில் அந்த அரசியல் யாப்பு அமைய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உத்தேச 20வது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூல வரைவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாக அதன் தலைவர் சஜித்பிரேமதாஸ மீண்டும் தெரிவித்துள்ளார்.

மாத்தறை – தெனியாய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனை குறிப்பிட்டுள்ளார்.

20 வது திருத்தச்சட்ட மூல வரைவிற்கு தமது தரப்பு முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளது.

அவ்வாறான எதிர்ப்பினை வெளிப்படுத்தி குறித்த வரைவினை தோற்கடிப்பதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கவுள்ளதாகவும் சஜித்பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உத்தேச 20வது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூல வரைவு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி இந்தவாரம் கூடி ஆராய்ந்த பின்னர் இறுதி தீர்மானங்களை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்குகூட்டணியின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் செய்தி சேவைக்கு ஒன்றிற்கு இதனை தெரிவித்தார்.

தலைவர் மனோகணேஷன் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் இந்தவாரம் அது குறித்து கலந்துரையாடியதன் பின்னர் அரசியலமைப்பு திருத்தச்சட்டமூல வரைவு தொடர்பிலான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.