Mai 2, 2024

5 லட்சம் கொடுக்க ஓடுகிறார்கள்! கீழ்தரமான அரசியல் – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “இளைஞர்கள் தான் நாளைய தமிழகம்.

இளைஞர்களே மாற்று அரசியலை நாம் உருவாக்க வேண்டும். இலவசத்திற்கு பின்னால் போனால் தமிழகம் வளர்ச்சி அடையாது. தேமுதிக 2021 மாபெரும் சக்தியாக வரும்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் வந்தது‌. நீட் எக்ஸாம் என்ற பெயரில் மாணவர்களை கொடுமைப்படுத்துவது, மாணவர்களை அலைக்கழிப்பது என்ற கலாச்சாரத்தை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த இரண்டு நாட்களில் நீட் தேர்வுக்கு எதிராக 3 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது வேதனை அளிக்கிறது. ஒரு மாணவன் இறந்தால் உடனே 5 லட்சம் கொடுக்க ஓடுகிறார்கள்.

மரணத்தில் அரசியல் செய்யும் கீழ்த்தரமான அரசியலை தமிழ்நாட்டில் பார்க்கிறேன். மாணவர்கள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் யார்? இங்கு எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது.

மூளைச்சலவை செய்து இளைஞர்கள் உயிரோடு விளையாடுவது வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஊழல் செய்யும் நிலைதான் தற்போது உள்ளது. மொழி, படிப்பு, சாதியை வைத்து அரசியல் செய்கின்றனர்

மக்கள் வாய்ப்பு கொடுத்திருந்தால் கேப்டன் அறிவித்த திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். எது சரி தவறு என்பதை சூர்யா முடிவு செய்து பேச வேண்டும்” எனக் கூறினார்