Mai 8, 2024

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கு கொரோனா!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகின்றது. கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோரின் அதிகம் அதிகரித்து வருகிறது.

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி. 83 வயதான சில்வியோ பெரும் வர்த்தகர் ஆவார். கோடீசுவரரான இவர் அரசியலில் புகுந்து வெற்றி பெற்றார். அதன்படி, கடந்த 1994-ம் ஆண்டில் இத்தாலியின் பிரதமரானார். அதன்பின், தொடர்ந்து 4 முறை அந்நாட்டின் பிரதமராக பெர்லஸ் கோனி செயல்பட்டுள்ளார்.

தற்போது சில்வியோ பெர்லஸ் தேசிய அளவிலான தனது பங்கை குறைத்துக்கொண்டு உள்ளூர் அரசியலில் தனது கட்சியினருக்கு ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில், பெர்லஸ் கோனிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அறிகுறிகள் எதுவும் இல்லாததால் மிலன் நகரின் அர்கோர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

பெர்லஸ், சர்டினியா தீவுகளுக்கு சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்தார். இதனால் அங்குதான் அவருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என அவரது மருத்துவ உதவியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனி விரைவில் குணமடைய பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.