April 26, 2024

சிங்கள மக்களால் கடவுளாக பார்க்கப்படும் யாழ் தமிழ் வைத்தியர்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி மலவரன் குறித்து வடக்கு மக்களுக்கு பெரிதாக பேசாத போதிலும் சிங்கள மக்கள் அவரை கொண்டாடி வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனுராதபுரம், மதவாச்சி, பதவிய, கெபத்திகொல்லாவ போன்ற சிங்கள விவசாய கிராமங்களில் வறுமையான மக்கள் அவரை கடவுளாக கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சி பகுதியை சேர்ந்த விஜேசிறி என்பவர் கண் பார்வை குறைபாட உடையவராகும். நீரிழிவு நோய் காரணமாக அவர் இரண்டு கண்களையும் இழக்க நேரிட்ட சந்தர்ப்பத்தில் இந்த வைத்தியர் அவரது ஒரு கண்ணை பூரண குணமாக்கியுள்ளார்.

“எனக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு வலது கண் முழுமையான பாதிக்கப்பட்டது. எனினும் இடது கண்ணை இந்த வைத்தியர் தான் காப்பாற்றினார். அதற்காக யாழ்ப்பாணம் சென்று வருவதற்கான பேருந்து கட்டணம் மாத்திரம் நான் ஏற்க வேண்டியிருந்தது.

கெபத்திகொல்லாவ போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் இந்த வைத்தியரை மிகவும் உயர் இடத்தில் வைத்து பார்க்கின்றார்கள். இந்த வைத்தியர் குறித்து பேசும் போது இரண்டு கைகளையும் கூப்பி வணங்கியே அவர்கள் பேசுகின்றார்கள்.

எங்களை ஒரு போதும் அழைந்து திரிய அவர் இடமளிக்க மாட்டார். எங்களிடம் பணம் இல்லை என்று தெரியவந்தால் உடனடியாக சிகிச்சைகளை வழங்கி விரைவில் வீட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்வார். வீட்டிற்கு நாங்கள் வந்த பின்னர் தொலைபேசியில் அழைத்து எங்களின் தற்போதைய நிலை குறித்து விசாரிப்பார்.

நாங்கள் இங்கு இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றால் மிகவும் சிறந்த முறையில் அவர் பார்த்துக் கொள்வார். இரண்டு முறை வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த மாட்டார். சில பரிசோதனைகளுக்கு பணம் தேவைப்பட்டாலும் அவர் அதனை அரசாங்க வைத்தியசாலையில் மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பார்” என அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கை தாண்டி சிங்கள மக்கள் தமிழ் மக்கள் குறித்து இந்த அளவு பேசும் போது நினைவுக்கு வரும் மற்றுமொரு வைத்தியர் யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி என சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இரண்டாவது சிறந்த வைத்தியராக தங்கப்பதக்கம் வென்ற வைத்தியர் சத்தியமூர்த்தி வவுனியா வைத்தியசாலையின் நவீன கட்டடம் ஒன்றிற்கு அடித்தளம் போட்டவர் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.