Mai 2, 2024
அரசாங்கத்திடம் வீடு வாங்கிய தமிழ் அரசியல்வாதிகள் யார் யார் தெரியுமா?

தமிழ் அரசியலை கவனித்தால், எப்பொழுதும் தியாகியும் இருப்பார்கள். துரோகிகளும் இருப்பார்கள். நமது அரசியல் உருவாக்கும் தியாகி, துரோகிகளையோ, முகநூல் போராளிகள் உருவாக்கும் தியாகி, துரோகிகளையோ நாம் குறிப்பிடவில்லை. தியாகி, துரோகியென்ற அரசியல் போக்கு எப்பொழுதும் இருந்து வருவார்கள் என்பதையே குறிப்பிடுகிறோம்.

மற்றும்படி, தமிழ் மிதவாத அரசியலில் தியாகிகள் எனப்படுபவர்கள் இருக்கிறார்களா என்பதும், ஆயுதம் தூக்கியவர்களில் துரோகிகள் இருக்கிறார்களா என்ற விவாதத்திற்குள் நாம் புகவில்லை. அப்படி யாரும் இருப்பதாகவும் நாம் நினைக்கவில்லை.

ஏனெனில் துரோகிகள் என யாரையும் வரையறுக்க இன்றிருக்கும் யாரும் தியாகிகள் இல்லை. இன்றிருப்பவர்கள் எல்லோரும் ஆட்டத்தின் பார்வையாளர்கள். பார்வையாளர்கள் மத்தியஸ்தர்களாகுவது ரொம்ப ஓவர்.

தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்துடன் ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் சிதறியது வரலாறு. அதில் பல அமைப்புக்கள் அரசின் ஆதரவில் இயங்கினர். அதற்கான நியாயங்களை தம்மளவில் அவை கொண்டுள்ளன. மற்ற இயக்கங்கள் அரசை நோக்கி சென்றதற்கான காரணத்தை புலிகளும் ஏற்றுக்கொண்டிருந்தனர். 1990களின் பிற்பகுதியில் இருந்து புலிகளிற்கும், ஏனைய ஆயுத இயக்கங்களிற்குமிடையில் புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாடு உருவாகியது இந்த பின்னணியில்தான்.

பொதுவாகவே தமிழ் மிதவாதிகள் ஆயுத இயக்கங்கள் மீது துரோகி, அரசுடன் சலுகைக்கு ஒட்டியிருப்பவர்கள் போன்ற விமர்சனங்களை சாதாரணமாக வைப்பார்கள். அதுவும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த குற்றச்சாட்டுக்கள் சரமாரியாக சுமத்தப்படும்.

ஆனால், உண்மையில் அரசிடமிருந்து சலுகைகளை தமிழ் மிதவாத தலைவர்களைவிட வேறு யாரும் அதிகமாக பெற்றுக்கொண்டதில்லை. பணமான, பொருளாக, இதர வடிவங்களில் முக்கிய தமிழ் மிதவாத தலைவர்கள் பெரும்பாலானவர்கள் “கையை நனைத்தவர்கள்“தான்.

ஆயுத, மிதவாத தலைவர்கள் பலரிற்கு அரசுகள் அவ்வப்போது வீடுகள் வழங்கியிருந்தாலும், அவை குறிப்பிட்ட காலகட்டத்திற்குரியவை. குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மீள கையளிக்க வேண்டியவை. ஆனால், கடந்த சில தசாப்தங்கில் அதிக உரித்துடன், மிதவாத தலைவர்களிற்கே அரசுகள் வீடு வழங்கியுள்ளது. இந்தவகையில், 3 தமிழ் மிதவாத தலைவர்கள் இந்தவகையில் வீட்டை  பெற்றிருந்தார்கள்.

இரா.சம்பந்தன்

சம்பந்தன் வீட்டை பெற்ற விவகாரம் இரகசியமல்ல. அண்மையில் இது நடந்ததால் அது பற்றி வெளியான செய்திகள் பெரும்பாலானவர்களிற்கு நினைவிருக்கும். அமைச்சரவை பத்திரத்தின் மூலமாக சொகுசு பங்களாவொன்று இரா.சம்பந்தனிற்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஐ.தே.க அரசில் புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் இழுத்தடிப்புக்கள் நடந்தபோது, அதில் அதிக அழுத்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோகிக்க முடியாமல் போனமைக்கு இந்த வீடு போன்ற சில பல சலுகைகள் முக்கிய காரணமாக அமைந்தது.

ஏற்கனவே சம்பந்தனிற்கு பழைய வீடொன்று வழங்கப்பட்டிருந்தது. அதிக படியேற வேண்டுமென கருதி, 2015இல் கொழும்பில்- ஐ.தே.க தமிழ் பெண் பிரமுகர் ஒருவரிற்கு சொந்தமான- வீட்டை மாத வாடகையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது. இரா.சம்பந்தன் மாடிப்படியேற சிரமம் என்றதால், அவர் புதிய வீட்டில் குடியிருக்க, ஒரு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் இயங்குமென்பது திட்டம்.

கனடாவிலிருந்து கொண்டு பணத்தின் மூலம் இலங்கையில் கூலிப்படை அரசியல் செய்யலாமென நினைக்கும் தமிழ் அரசு கட்சி கனடா கிளையென சொல்லும் கும்பல் வழக்கம் போல அந்த வீட்டிற்கான செலவை ஏற்றிருந்தது. அலுவலக தளபாடங்கள், கணினி கொள்வனவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என இரா.சம்பந்தன் தெரிவித்து விட்டார். அதுபற்றி அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, தனது வீடு இராசியானது, அதைவிட்டு வர மாட்டேன் என காட்டமாக தெரிவித்திருந்தார்.

இதே சம்பந்தன்தான், அரசிடம் வீடு வாங்கிய தகவல் வெளியானதும், பழைய-மாடிப்படியேற சிரமமான வீட்டிலிருந்து- சௌகரியமான வீட்டிற்கு குடிபெயர்ந்ததில் என்ன தவறு என கேட்டார்.

ஆனந்தசங்கரி

இரா.சம்பந்தன் வீடு வாங்கி விட்டார் என ஆனந்தசங்கரி நாளொரு அறிக்கை விட்டபடியிருந்தார். சலுகைக்கு விலை போய் விட்டார்கள், தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து விட்டார்கள் என எதுகை மோனையாக ஆனந்தசங்கரி, அறிக்கை விட்டுக் கொண்டிருந்தது அரசாங்கம் வழங்கிய வீட்டில் இருந்தபடி என்பது வேடிக்கையானது.

அதுவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத, தனது அந்திமக்காலத்தில் அந்த வீட்டை பெற்றாார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டு அவர் அந்த வீட்டை பெற்றிருந்தார்.

மாதிவெலவில் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான வீட்டுத் தொகுதியில் உள்ள பழைய வீடுதான் அது. ஆனால், அரசால் வழங்கப்பட்ட வீடு அது.

இதில் கவனிக்க வேண்டியது- இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி இருவரதும் வீடுகளும் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை பாவிக்கலாம்.

கி.துரைராசசிங்கம்

சம்பந்தன், சங்கரி இருவரைப் போலல்லாமல், கொழும்பில் நிரந்தரமான வீடொன்றை இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் மட்டுமே பெற்றிருந்தார் என அவரது கட்சிக்குள்ளேயே பேச்சுண்டு.

கடந்த 1994ம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி ஊடாக மட்டக்களப்பில் மறைந்த ஜோசப் பரராசசிங்கம், பொ.செல்வராசா, கி.துரைராசசிங்கம் ஆகிய மூவரும், திருகோணமலையில் தங்கத்துரையும் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களாக வாக்களிப்பு மூலமாக தெரிவானார்கள் தேசியப்பட்டியல் உறுப்பினராக நீலன் திருச்செல்வம் நியமிக்கப்பட்டார்.

பின்னர் நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்டார். அவரின் இடத்திற்கு மாவை சேனாதிராசா தெரிவானார். திருகோணமலையில் தங்கத்துரை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் இடத்திற்கு அடுத்த விருப்பு வாக்குகளைபெற்ற இ.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றனர்.

சந்திரிகா அரசு அப்போது வீடமைப்பு நிரமானத்துறை அமைச்சர் ஊடாக தமக்கு சார்பான தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாக கொழும்பில் மொறட்டுவை சொய்சாபுரவில் இலவசமாக மாடிவீட்டுத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டன. (ஒரு வீட்டின் பெறுமதி அப்போது அறுபத்தி இரண்டு இலட்சம்)

தமிழர் விடுதலை கூட்டணியின் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது அந்த சலுகையை ஏற்கவில்லை. கி.துரைராசசிங்கம் மட்டுமே ஏற்றதாகவும், அவருக்கு வீடு வழங்கப்பட்டதாகவும் கிழக்கு அரசியல் பிரமுகர்களிடம் பேச்சுண்டு. அந்த வீட்டை அவர் வாடகைக்கு கொடுத்துள்ளார்.