Mai 17, 2024

விடுதலைக் கூட்டணி புதிய பாதையில்?

தமிழ்தேசியவாதிகளாக தங்களை காட்டிக் கொண்டு நடைமுறைக்கு சாத்தியமற்றவைகளை பேசி தமிழ் மக்களிடம் இருப்பவற்றையும் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளியவர்கள் தற்போது மதத்தின் பெயரால் தமிழ் மக்களிடையே பிளவுகளை உண்டாக்கவும்,
இருக்கும் பிளவுகளை வலுப்படுத்தவும் முயற்சிக்கின்றார்கள். மேற்கண்டவாறு தமிழர் விடுதலை கூட்டணி சார்பான நாடாளுமன்ற வேட்பாளர் சண்முகராஜா அரவிந்தன் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் ஆங்காங்கே மதவாதம் தலைதுாக்குவதை  அவதானிக்ககூடியதாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை சம்மந்தப்பட்டவர்கள் நிறுத்தவேண்டும். தமிழ் மக்கள் ஏற்கனவே பிளவுபட்டு நிற்கிறார்கள். இதற் கிடையில் மதரீதியான பிளவுகளையும் உண்டாக்குவதன் ஊடாக
மக்களை பலமிழக்க செய்ய முயற்சிக்கப்படுகிறது. நடக்க முடியாத விடயங்களை பேசி தமிழர்கள் இருக்கும் காணிகளையும், அடையாளங்களையும், சமூக ஒழுங்கங்களையும் பறிகொடுக்கும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியவர்கள்.
இப்போது மதரீதியான பிளவுகளை துாண்டுகிறார்கள். இது தமிழ் சமூகத்திற்கு ஆபத்தையே உண்டாக்கும். பேசுவதற்கும் செய்வதற்கும் பல விடயங்கள் உள்ளன. அரசியல் கைதிகள், காணாமல்போனவர்கள், காணி அபகரிப்புக்கள், வேலைவாய்ப்பு,
பொருளாதார அபிவிருத்தி என பல விடயங்கள் உள்ள நிலையில் தங்களை தேசியவாதிகளாக காட்டும் இரு கட்சிகள் இந்த செயலை செய்து கொண்டிருக்கின்றன. அதனை அவர்கள் நிறுத்தவேண்டும். மேலும் மக்கள் இவ்வாறான தரப்புக்கள் தொடர்பாக விழிப்பாக இருக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு சரியானதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் தங்களிடம் உள்ள ஜனநாயக ஆணையை எமக்க வழங்கவேண்டும். அதன் ஊடாகவே நாம் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் காணிகளையும், அடையாளங்களையும, சமூக ஒழுக்கங்களையும் மீள பெறமுடியும். எமக்கு மக்கள் வழங்கும் ஜனநாயக அங்கீகாரத்தை சரியாக பயன்படுத்துவோம் என்றார்.