September 19, 2024

ஈழத்தமிழர்களின் ஒற்றுமையின் அடையாளமே தமிழ் பொது வேட்பாளர் : வெளியான அறிக்கை

ஈழத் தமிழரின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக தமிழ்ப் பொது வேட்பாளர் முன் நிறுத்தப்பட்டுள்ளார் என வட கிழக்கு மாகாணங்களுக்கான நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியத்தின் அருட்பணி கிறிஸ்தோபர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து நேற்று (13) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி-கூட்டு அரசியல் இறந்த கால வரலாற்றுடன் தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது.

ஈழத்தமிழர்களின் ஒற்றுமையின் அடையாளமே தமிழ் பொது வேட்பாளர் : வெளியான அறிக்கை | Tamil General Candidate A Symbol Of Eelam Unity

தற்போது உள்ள ஜனநாயக முறைமை எண்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்ற உண்மை பொது அறிவுக்கு உட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய ஜனாதிபதி ஜனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள, பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரசார மேடைகளை அலங்கரிக்கிறார்கள்.

ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோருவதை மறுப்பதோடு இல்லாமல் சிறிலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதாநாயக சொல்லாடலுக்கூடாகவே கட்டமைக்கிறார்கள்.

தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இது வெவ்வேறு வடிவங்களை, பரிமாணங்களை கொண்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் ஒற்றுமையின் அடையாளமே தமிழ் பொது வேட்பாளர் : வெளியான அறிக்கை | Tamil General Candidate A Symbol Of Eelam Unity

உதாரணமாக ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல், ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்து அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது. ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன. சிங்கள – பௌத்த மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒட்டு மொத்தத்தில் ஈழத் தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்ற இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத்தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இம் முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை“ என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Gallery

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert