அருச்சுனாவிற்கும் ஆசை விடவில்லை!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுபணம் செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை வைத்தியர் அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
வைத்தியர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் இறுதி நேரத்தில் அநுர குமார திசாநாயக்கவிற்கு ஆதரவு வழங்குவதாக சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிறையிலிருந்து நேற்று பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேட்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 22 சுயேட்சைக் குழுக்களும் இன்றுவரை கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
இதேபோன்று வன்னி மாவட்டத்தில் 21 சுயேட்சைக் குழுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 17 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.எனினும் நாளை வெள்ளிக்கிழமை மேலும் பல தரப்புக்கள் கட்டுப்பணத்தை செலுத்தலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.