Dezember 2, 2024

வடக்கில் போதைப்பொருள் மற்றும் மண் கடத்தலை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும்  சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.  

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 

கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,  வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து  மாவட்ட செயலர்கள், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாண இராணுவ, கடற்படை,விமானப்படை பொறுப்பதிகாரிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் தொடர்பான இரகசிய நடவடிக்கைகள் விரிவுபடுத்தல். போதைப் பொருளுக்கு எதிராக செயல்படும் சமூக செயற்பாட்டாளர்களது பாதுகாப்பு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன் பொழுது சிவில் சமூக பிரதிநிதிகளால் வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட சில பிரதேசரீதியாகவும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சமூகப் பிணக்குகள் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

மண் அகழ்வில் போலியான அனுமதி பத்திரங்கள் தயாரித்து இடம்பெறும் மோசடி தொடர்பாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. 

மண் அகழ்வினால் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பாகவும் கவனம் எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்கள் தொடர்பான விடயங்களும் கவனத்தில் எடுக்கப்பட்டது. 

வீதியில் பயணிப்பவர்களின் அவதானம் இன்மையால் பல விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. நகர்ப்பகுதி வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் உரிய சமிஞ்சைகள் இன்றி வீதிகளில் விரைவாக திரும்புதல் மற்றும் அதிக வேகம் போன்றவற்றிற்கு  போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பணிப்புரை விடுக்கப்பட்டது. 

இதன் போது வீதி விபத்துக்கள் தொடர்பாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert