Juli 21, 2024

சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் தரகர் சுமந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் தான் சிங்கள தேசத்தின் நிரந்தர அரசியல் தரகர் என்பதை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் சிங்களத்தின் குரலாக அவரின் ஆக்குரோசமான பேச்சின் மூலம் மீண்டும் ஒருதடவை உறுதிப்படுத்தியுள்ளார்.

போர்க்கலை வல்லுநர்களே வியர்ந்து பார்க்கும் அளவிற்கு தமிழர்களின் இராணுவ வலிமையையும், போர் அறத்தையும் தனது உணர்ச்சிகரமான ஆளுமை மூலம் எழுச்சி உரையாற்றக்கூடிய எங்கள் தேசத்தின் தன்மானத் தளபதி அமுதாப் அவர்களையே தரகர் சுமந்திரன் அவர்கள் தனது உணர்ச்சிகரமான தனது பேச்சின் மூலம் விஞ்சிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு சுமந்திரன் சிங்களத்திற்காக மேடையில் சரவெடியாக வெடித்திருக்கிறார். சகோதரர் சிவாஜிலிங்கம் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே போயிருந்தார் அதனால் உண்மையிலே நான் கூட சற்று யோசித்துவிட்டேன்.

தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனுக்காக மகுடி வாசிக்கும் சிலர் சுமந்திரன் ஒரு சாணக்கியர் அவர் கஜேந்திரன்கள் போல உணர்ச்சிகரமாக பேசுபவர் அல்ல அவர் ஒரு இராஜதந்திரி என்று அவரின் தலைக்குள்ளே அன்ரன் பாலசிங்கத்தை கண்டுபிடித்த வாத்தியார் கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் உளறினார் ஆனால் சுமந்திரன் பொங்க வேண்டிய இடத்தில் தான் பொங்குவார் கோடிகளைப் பொறுத்து அவர் பொங்கும் அளவும் வேறுபடும். தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மன்னாரில் கத்தோலிக்க பாதிரியார்களுக்கு முன்பாக செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வயதிற்கு வந்த குமரிபோல் அடக்கத்துடன் இருப்பார் அதுவே சிங்கள தேசத்திற்கு ஒரு அரசியல் நெருக்கடி என்றால் சுமந்திரன் அவர்கள் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் போல எரிமலையாய் வெடித்துச் சிதறுவார் என்பதை சுமந்திரனின் மேடைப் பேச்சு அம்பலப்படுத்திவிட்டது.

தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரித்து குறிப்பாக தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் தாயகம் தழுவி சிவில் சமூகத்தின் ஒன்றுபட்ட தன்னெழுச்சியை நீர்த்துப்போகச் செய்து வழமைபோல சிங்கள வேட்பாளருக்கு முன் நிபந்தனையின்றி தமிழர்களின் வாக்குகளை அபகரித்துக் கொடுக்கும் சிங்கள தேசத்தின் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் முகவராகவே சுமந்திரனின் வார்த்தைகள் ஓவ்வொன்றும் மேடையில் நெருப்பை கக்கியது.

சுமந்திரனின் இந்த பேச்சு தமிழ்த் தேசிய அரசியலில் ஊடுருவியிருக்கும் துரோகத்தின் ஆழத்தை மட்டுமல்ல, சிவில் சமூகம் நிர்வாக ரீதியாக மேலும் எழுச்சி பெறவேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்துவதோடு, துரோகங்களை வீழ்த்தாமல் தியாகங்களை ஒருபோதும் அடையமுடியாது என்ற வரலாற்றுப் படிப்பினையையும் தமிழ் மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பேரெழுச்சியாக எழுந்துவரும் சிவில் சமூகத்திற்கும் உணர்த்தியிருக்கும் என்று நம்புகின்றேன்.

கடந்த காலங்களைப் போன்றே இம்முறையும் தமிழர்களது வாக்குகளை பேரம்பேச பயன்படுத்த வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையில் சுமந்திரன் அவர்களே நீங்கள் உண்மையான கிறிஸ்தவர் என்றால் உங்கள் புனித நூலான பைபிளில் கைவைத்து சத்தியம் செய்யுங்கள் இதுவரை நீங்கள் பேரம்பேசியது தமிழ் மக்களுக்காகவா அல்லது உங்களின் தனிப்பட்ட சொந்த நலன்களுக்காகவா என்று எமக்குத் தெரியும் உங்களால் ஒருபோதும் சத்தியம் செய்ய முடியாது?

உங்கள் துரோகத்தின் பட்டியல் நீண்டது யார் தமிழ் மக்க மீதான இனவழிப்பு யுத்தத்தை வலி நடத்திய இராணுவத் தளபதி பொன்சேகா அவர்களையே தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கழுவியதைக்கூறவா ? அல்லது சிறிசேன – ரணில் கூட்டாட்சிக் காலத்தில் சமபந்தன் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காகவும்,செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவிக்காகவும், கூட்டமைபின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிக்காகவும் தமிழர்களின் வாக்குகளையும் மட்டுமல்ல ஜெனிவாவில் சிறீலங்கா அரசுக்கு நெருக்கடி வராமல் தமிழர்களின் இரத்தத்தையும் நீங்கள் பலியிட்டதை உங்களை விட அரசறிவியல் ஆளுமையோடு இருக்கும் பேராசிரியர் கணேசலிங்கத்திற்கும் , அரசியல் சிந்தனையாளர் சோதிலிங்கம் போன்ற எமது சிவில் ஆளுமைகளுக்கும் உங்கள் துரோகத்தின் ஆழம் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் துரோகத்தின் அளவு அதன்
வீச்செல்லையின் பரிணாமங்களை புரிந்துகொண்டு தான் தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி எமது சிவில் அமைப்புக்கள் ஆழமான கூட்டுணர்வுக்கும், அரசியல் ரீதியாக முடிவுகளை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார்கள் என்பதை சிங்களத்தின் பெட்டிக்குள் தலையை விட்டிருக்கும் உங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.

தமிழர்களின் இறையாண்மை பற்றி முடிவெடுப்பதற்கு சிவில் சமூகத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று இன்று நீங்கள் கூறுவதற்கான துணிச்சலை உங்களுக்கு தந்தவர்கள் எமது சிவில் சமூகத்தினரும், எமது மக்களும் தான் என்பது நூறு வீதம் உண்மை தான்.

தமிழகத்தை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் காவேரிப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை புறந்தள்ளி கர்நாடகவிற்கு ஆதரவாக ஒருவேளை டெல்லியில் கையொப்பம் போட்டுவிட்டு தமிழகம் வரமுடியுமா? தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து சிவில் அமைப்புக்களும், மக்களும் ஒன்றிணைந்து அவரை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள் அல்லவா? என்ன செய்வது எமது மண்ணிலே உள்ள எமது மக்களும், சிவில் அமைப்புக்களும் உங்கள் விடயத்தில் , சூடு சொரணையோடு நடக்கவில்லை என்பதால் தான் நீங்கள் அரசியல் முடிவுகளை சிவில் சமூகம் எடுக்க முடியாது தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தான் எடுக்க வேண்டும் என்று நீங்கள் கூவியிருக்கிறீர்கள்.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூகத்தின் ஆளுமைகள் ஒன்றுபட்ட முடிவை கோமாளிகள் எடுத்த முடிவு என்று சுமந்திரன் சுட்டிக்காட்டுவதற்கு சிவில் சமூகதினர் தமது நேரத்தையும், பொருளாதாரத்தையும் இன்னும் கூடுதலாக தியாகம் செய்து பலமான அமைப்பாக எழுச்பெறத் தவறியதன் விளைவே இன்று சுமந்திரன் சிவில் சமூகத்தை நோக்கி கைகளை நீட்டியும், முடக்கியும் பேசுவதற்கு காரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

சிறீலங்காவை காப்பாற்றும் நோக்கத்துடன் வவுனியா வன்னியின் விருந்தினர் விடுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி சிறீலங்காவிற்கு ஐ.நா.காலா அவகாசம் வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து கடிதம் எழுதி கையொப்பம் போட்டபோது எமது மண்ணிலே உள்ள மக்களும் ,சிவில் அமைப்புகளும் உயிர்ப்போடு இருந்திருந்தால் நீங்கள் அனைவரும் விடுதியை விட்டு வெளியேற முடியாதவாறு நீங்கள் கூட்டம் நடத்திய விடுதியை முற்றுகையிட்டிருப்பார்கள் அவ்வாறு நடந்திருந்தால் நிச்சயம் இன்று உங்களுக்கு சிவில் சமூகத்தின் ஆழமான அழுத்தத்தின் உண்மையான வலிமை தெரிந்திருக்கும் இதனால் உங்கள் துரோகத்தின் நீட்சியும் இன்று இவ்வளவு தூரம் எல்லை கடந்திருக்காது

மாற்றம் ஒன்றே மாறாது…..!!!!!!

நன்றி

சண் மாஸ்டர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert