Juni 14, 2024

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்.

கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் .

வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப் போனது. 15 ஆண்டுகள் இதயம் கனக்க நாம் மெல்ல மெல்ல எழுகின்றோம்.
எம் உறவுகள் சிந்திய இரத்தம் எம் கண்களில் வழிய சிவந்த விழிகளோடு நாம் நியாயம் கேட்கப் புறப்படுவோம்.கொத்துக் கொத்தாய் குண்டுகள், செத்து செத்து விழுந்தனர் எம் சொந்தங்கள்.
முள்ளிவாய்க்காலில் இறுதி நொடிவரை தமிழீழ மண்ணுக்குள் விதையாகிப் போன வீரமறவர்களுக்கும், சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட மக்களுக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லினில் Neukölln மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திடலில் தமிழின அழிப்பு நினைவு நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், முள்ளிவாய்க்கால் தூபிக்கு சுடர் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தூபி தாயகத்தில் இடித்தழிக்கப்பட்டாலும் மீண்டும் அது உருவாகும் என்பதற்கு அமைவாக இந்த தூபி மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் எமது மாவீரர்களின் அதியுச்ச தியாகங்களையும் எமது மக்களின் வலியை எடுத்துரைக்கும் உரைகளும் கவிதைகளும் இடம்பெற்றது. எமது தேசியக்கொடி தொடர்பாக பேர்லின் நகரில் நடைபெறும் வழக்கு விடையமாகவும் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு , இறுதிவரை அதற்காக போராடுவோம் என உறுதியளிக்கப்பட்டது.

பேர்லினில் நடைபெறும் தமிழ் பெண்கள் அமைப்பினரால் “முள்ளிவாய்க்கால் முற்றம் ” சிறுவர்களின் கையெழுத்து ஆக்கத்தை கொண்ட இதழ் 12 வது தடவையாக இவ்வருடமும் வெளியிடப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத வடு . அதை எமது அடுத்த தலைமுறைக்கும் மறவாமல் கடத்துவது எமது தலையாய கடமை. அந்த வகையில் தான் தமிழ் பெண்கள் அமைப்பினரால் இவ் முயற்சி கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.பெற்றவர்கள் முன் பிள்ளைகள் மடிய, பிள்ளைகள் கண்முன் பெற்றவர் மடிய,உற்ற சொந்தங்கள் உதிரத்தில் நனைய, உயிர் கொண்ட மனிதம் அய்யோ எனக் கதற, உண்ணுங்கள் குண்டுச் சிதறல்களை ,உடுத்துங்கள் உங்கள் குருதியையே ,எண்ணுங்கள் உங்கள் இறுதி நாட்களை,எனச் சிரித்ததே இப்பாழ்புவி அன்று.

“ஓர் இனத்தின் தேசத்தை, வீரஇனத்தின் இருப்பை அழித்தொழித்துவிட்டு மாபெரும் இனவழிப்பை புரிந்து விட்டு சர்வதேசங்களை நோக்கி மமதையோடு ஆட்சிபுரியும் சிங்கள இனவாத அரசு அதன் இனவழிப்புப் போரிற்கு பதில் கூறும் தருணம் வந்துள்ளது. புதைந்து போனவை எம் உயிர்கள் மட்டுமே. போரில் சென்றவை எம் உடைமை மட்டுமே. சிதைந்து போனவை எம் உடல்கள் மட்டுமே. ஆனால் தமிழீழ கனவை யாராலும் அழித்துவிட முடியாது என இவ் வணக்க நிகழ்வு உறுதி கொண்டது.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் முகமாக கண்காட்சியும் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டு, துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.இறுதியில் எமது மக்களின் வலியையும் வாழ்வையும் எடுத்துரைக்கும் வரலாற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் வரை ஓயாமல் போராடுவோம் எனும் உறுதிமொழி ஏற்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert