April 26, 2024

நடிகர் விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் நீதிபதி கண்டனம்

நடிகர் விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் நீதிபதி கண்டனம்

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, சரமாரி கேள்விகளையும் முன்வைத்தார்.

நடிகர் தனுஷ், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எனப்படும் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இதற்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நுழைவு வரியில் 50 சதவீதத்தை செலுத்தும்படி தனுசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன்படி அவர் 50 சதவீத வரி தொகையை செலுத்தி தன்னுடைய சொகுசு காரை பதிவு செய்து கொண்டார்.

இந்த நிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, சரமாரி கேள்விகளையும் முன்வைத்தார்.

என்ன தொழில் செய்கிறார் என தனுஷ் மனுவில் தெரிவிக்காதது ஏன்?, பணியையோ அல்லது தொழிலையோ குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா? என கேள்வி எழுப்பினார்.

ரூ.50-க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார். பெட்ரோலில் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? எனவும், மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

இதையடுத்து நடிகர் தனுஷ் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை வணிகவரித்துறை கணக்கீடு செய்து பிற்பகல் 2:15 மணிக்குள் கூற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏற்கனவே சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்ததோடு, ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.