Mai 18, 2024

போதனா வைத்தியசாலை பணியாளருக்கும் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நான்கு பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட 431 பேரின் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி கைதி ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்படடுள்ளனர்.

மேலும் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்.

இதேவேளை, மல்லாவியில் புத்தளத்திலிருந்து வருகை தந்த பெண் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்கு புத்தளத்திலிருந்து வருகை தந்தோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இருவருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது 955 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இதுவரை 232 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தொற்று உறுதியானோரில் 190 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் 487 குடும்பங்களை சேர்ந்த 955 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.