Mai 18, 2024

அமெரிக்காவும் அதிருப்தி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பில் தனது டுவிட்டரில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ்:

பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதிலிருந்து அரசாங்கமும், பிரதமரும் பின்வாங்குவதைக் காணும்போது ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் முன்னர் அளித்த வாக்குறுதியை அலெய்னா டெப்லிட்ஸ் வரவேற்றதுடன், சர்வதேச பொதுச் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மதச் சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உடல் அடக்கம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சின் நிபுணர் குழு முடிவு செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பாராளுமன்றத்துக்குத் தெரிவித்த பின்னர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இலங்கையில் அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்த மறுநாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.