Mai 18, 2024

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இணைந்துள்ள 5 நாடுகள்! பதிலடிக்கு காத்திருக்கும் இலங்கை

ஜெனீவா எப்போதும் இலங்கைக்கு எதிராகவே இருந்து வருகிறது. 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாங்கள் விலகியதில் எங்களுக்கு நிம்மதி.

இதனால் பல நாடுகள் எங்கள் உதவிக்கு வருகின்றன என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மேலும் இந்த முறை 5 நாடுகள் எங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வர உள்ளதாக அறிய முடிகின்றது.

நாம் அதற்கும் ஒரு பதிலை வழங்கவே எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்” என்றார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய 30 நபர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தொடர்புடைய ஆதாரங்களை சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் தற்போது 251 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பேராயர் கர்தினாலுக்கும் கத்தோலிக்க மக்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அவர்களுடைய தேவையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

கொலைகள் மற்றும் சதித்திட்டங்கள் குறித்து 30 பேர் தொடர்பான தகவல்களை நாங்கள் சட்டமா அதிபருக்கு கொடுத்துள்ளோம்.

மேலும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் சென்ற பின்னரே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

நாங்கள் வழக்குத் தொடங்கியதும், நீதிக்காக எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்”என்று அமைச்சர் சரத் வீரசேகர விளக்கினார்.