Mai 18, 2024

உலகமே இலங்கை பக்கமாம்!

இறுதிக்கட்டயுத்ததில் மனித உரிமை மீறள்கள் இடம்பெறவில்லை என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இதுவரை கவனம் செலுத்தவில்லையென கவலை தெரிவித்துள்ளார் காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன.

அதேவேளை சர்வதேச அரங்கில் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் பல இம்முறை அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும். இருப்பினும் உள்ளகப் பிரச்னைக்கு சர்வதேச அரங்கில் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.

இதுவரையில் குற்றச்சாட்டுக்கள் எவையும் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கை விவகாரத்தில் ஒருதலைபட்சமாகவே செயற்படுகிறார். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அடிப்படை கொள்கைக்கு முரணானது.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மாத்திரம் கவனம் அதிக அக்கறை காட்டப்படுகிறது. இது பொருத்தமற்றதாகும்.

சர்வதேச அரங்கில் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் தமிழ்தேசிய தரப்பினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறான செயல்பாடுகளால் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது. இம்முறை இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் பலம் கொண்ட நாடுகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.