Mai 18, 2024

கோத்தாவை நம்ப தயாரில்லை:சுமந்திரன்!

இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு ஏதாவது பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நான் எங்கும் முறையிடாத போதும் அரசாங்கமே எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்தது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில்; வழக்கு பதியப்பட்டு நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தெற்கின் சிங்கள பாதாளக் குழுக்களின் 15 உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 30 பேரை தடுப்பில் வைக்கும் வரை இவை தொடர்பாக நான் எதனையும் அறிந்திருக்கவில்லை.

எனவே எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எனக்குத் தெரிவிக்காது அல்லது நான் முறையிடாத போது அரசாங்கம் அநேகமானோரை தடுப்பில் வைக்குமானால் தற்போது அதை மீளப்பெறுவதேன்?

ஒருவேளை இவ்விடயங்கள் உண்மையாக இருந்த போதும் நான் பேரணியில் பங்குபற்றியதன் விளைவாக அரசாங்கம் என் மீது எரிச்சல் அடைந்திருக்கலாம்.

அல்லது கூறப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான விடயங்கள் பொய்யாகவும், அரசு அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருப்பதற்காகவும் இருக்கலாம்.

அல்லது மிகவும் வஞ்சனை காரணமாக எனது பாதுகாப்பை அகற்றுவதன் மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு சமிக்ஞை அளிப்பதாகவும் இருக்கலாம்.

எனவே எனக்கு ஏதாவது பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.