Mai 19, 2024

ஐ.நா அறிக்கைக்கு ஆதாரம் போதாதாம்: நிராகரிப்பதாக கூறுகிறது அரசு!

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் அம்மையார் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஜனவரி 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மைக்கல் பேச்லெட், இலங்கையின் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையால் “அச்சமடைந்துள்ளேன்” என்றும், மனித உரிமைகள் எதிர்கால மீறல்களின் அபாயத்தை எதிர்கொள்ள மனித உரிமைகள் பேரவை கறாரான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த அறிக்கை, எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில, நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது என்றார்.

வரவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் பதிலை வழங்குவார் என்றார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிக்கையைத் தொகுக்கும் போது 30/1 மற்றும் 40/1 தீர்மானங்கள் மூலம் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிவிட்டார் என்று அமைச்சர் கமன்பில மேலும் கூறினார்.

ஐ.நா உயர் ஸ்தானிகர் தனது குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடனும் சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இலங்கை தொடர்பான புதிய அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

2015 மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 இல், மோதலின் போது செய்யப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதற்கான இழப்பீடுகள், நீதி சீர்திருத்தங்கள் மற்றும் பிற வழிமுறைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முந்தைய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

2020 இல், கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகம் தன்னிச்சையாக இந்த பொறுப்புக்களிலிருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.