இலங்கை வரலாற்றில் மகிந்த திருடனாக இடம்பிடிப்பதை எவராலும் தடுக்க முடியாது – தேரர் ஆவேசம்
தமது குடும்பத்தில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு தயங்காத ராஜபக்ஸ ஆட்சியாளர்களால், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என தென்னிலங்கையின் பௌத்த துறவியான தேவால்ஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் காணொளியொன்றை வெளியிட்டுள்ள தேரர், இலங்கை வரலாற்றில் ஒரு பயனற்ற ஆட்சியாளராகவும், திருடராகவும் மஹிந்த ராஜபக்ச இடம்பிடிப்பதை தடுக்க எவராலும் முடியாது எனவும் கூறியுள்ளார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் அதற்காக இந்நாட்டு மக்கள் மதித்தார்கள், அன்பு செலுத்தினார்கள், கௌரவமாக நடத்தினார்கள். ஆனாலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது மாத்திரமே. அதுவும் தானாக தான் நடந்தது. நான் உறுதியாக சொல்கின்றேன். எப்போது பேசினாலும் நீங்கள் யுத்தத்தை முடித்ததை மட்டுமே சொல்கின்றீர்கள்.
நாடு முழுவதும் அபிவிருத்தி செய்ததாக சொல்கின்றீர்கள். ஆனால் உலகத்தில் பல நாடுகளிடம் கடன் வாங்கி இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் உலகிற்கு கடனாளிகளாக மாற்றித்தான் நாட்டை அபிவிருத்தி செய்துள்ளீர்கள். நாட்டின் வளங்கள் இன்று நாட்டில் எங்குமே இல்லை. நாட்டில் அனைத்து வளங்களையும் கொள்ளையடித்து இந்த நாட்டை நாசம் செய்துவிட்டீர்கள். இவர்களின் பாவங்களைத் தான் இன்று அப்பாவி மக்கள் அனுபவிக்கின்றார்கள்.
நாளாந்தம் மக்கள் இறக்கிறார்கள், ஒரு மணித்தியாலத்திற்கு 5 பேர் வீதம் இறக்கின்றனர். 5 கோடி 10 கோடிக்கு வாகனங்களை கொண்டு வருகின்றார்கள். இவர்களுக்கு ஒரே குதூகலம். முழு ராஜபக்ச குடும்பத்திற்கும், நாய்கள் இருந்தால் அவைகளையும் இணைத்துக் கொண்டு அனைவருக்கும் அமைச்சு பதவிகளை வழங்குவார்கள்.
அப்பாவி மக்களை ஏமாற்றி 225 பேருடனும் டீல் போட்டு இந்த நாட்டின் செல்வங்களான சிறுவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து நாட்டை சீரழிக்கின்றனர். இந்த ராஜபக்ச ஆட்சியாளர்களை தவிர வேறு எவரும் இந்த நாட்டை இவ்வளவு நாசம் செய்யவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாளில் கூட இவ்வளவு பேர் இறக்கவில்லை. கொரோனாவை இவர்கள் வேண்டுமென்றே பரப்பினார்கள். நாட்டை மூடவேண்டிய நேரத்தில் மூடவில்லை. இப்பொழுது நாட்டை மூட தீர்மானிக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.