November 23, 2024

றிசாட் மீண்டும் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பொலிஸ் தலைமையகத்தின் கொவிட் கட்டுப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக செயற்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கைது செய்து மன்றில் முனை்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இதன்போதே, விசாரணையாளர்களுடன், முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இருவேறு சந்தர்ப்பங்களில் இதனை  குறிப்பிட்டார்.

மேலும் சிகிச்சைகளின்போது தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக ஹிஷாலினி குறிப்பிட்டதாக வெளிப்படுத்தியதாக கூறப்படும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி, தற்போது வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் வைத்தியர் ரந்திக்கவிடம் விஷேட வாக்கு மூலத்தினை பதிவு செய்யவுள்ளதாகவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இதற்கான தொடர்பாடலை ஏற்படுத்தித் தருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்ததாக விசாரணைகளை மேற்பார்வை செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வா இதன்போது தெரிவித்தார்.

இதேநேரம், உடலில் தீ பரவிய பின்னர், அது அணைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு ஹிஷாலினி அழைத்து செல்லப்படும்போதும் அவர் சாதாரணமாக நினைவுடன் கூடிய பேசும் நிலையில் இருந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரினதும் கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம், அவர்களின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.