April 28, 2024

இந்தியபடையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய ஒத்தாசைகள்.

ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியாவின் துரோகங்கள் 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி முதல் ஒரு புதிய பரிணாமத்தைப் பெற ஆரம்பித்திருந்தது.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக அதுவரை இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியிலான துரோகங்களைப் புரிந்து வந்த இந்தியா, அன்று முதல் ஈழத்தமிழருக்கு எதிரான படுகொலைகள் என்ற ஒரு புதிய அத்தியாயத்தை வரைய ஆரம்பித்தது.

ஈழத்தமிழர்களைக் காப்பாற்றப்போவதாகக்கூறி இலங்கை வந்த இந்தியப் படை வீரர்கள், கண்களில் அகப்பட்ட தமிழர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிய ஒரு கொடூர செயலைப் புரிய ஆரம்பித்திருந்தார்கள்.

புலிகளின் பூரண முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில், பிரம்படி வீதியில் தளம் அமைத்திருந்த இந்திய பராக் கொமாண்டோக்கள், தமக்கு மேலிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுகளின்படி கண்களில் அகப்பட்வர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

திருமதி விஸ்வலிங்கம் என்பவருடைய வீட்டில் தங்கியிருந்த பத்துப் பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அந்த வீட்டை அவர்கள் தமது தற்காலிக தளமாக ஆக்கிக்கொண்டு; அங்கு நிலை எடுத்திருந்தார்கள்.

காயப்பட்ட நிலையில் மணியம் என்பவர் தெரியாமல் அந்த வீட்டினருகே வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டார். அவரை உள்ளே அழைத்த இந்தியப் படைவீரர்கள், அங்கு அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.

மதிய வேளையில் தனது உறவினர் ஒருவரைத் தேடி அங்கு வந்த சோமசுந்தரம் என்பவரும் சுடப்பட்டார். தெரிந்தோ தெரியாமலோ திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டைக் கடந்து சென்றவர்கள் அனைவருமே ஈவிரக்கம் இன்றிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

சிறிலங்காப் படைகள் வழங்கிய உதவிகள்

இதற்கிடையில் முற்றுகைக்குள் அகப்பட்ட இந்தியப் பராக் கொமாண்டோக்களுக்கு உதவியாக யாழ் கோட்டையில் இருந்து பரவலாக செல் தாக்குதல்கள் ஆரம்பமாகி இருந்தன. யாழ் கோட்டையில் இருந்து தொடர்ச்சியாக செல்கள் ஏவப்பட்டபடியே இருந்தன.

புலிகளின் கவனத்தைத் திசை திருப்பவும், புலிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தவும், செல்தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டபடியே இருந்தது.

அந்த செல் மழையில் பல தமிழ் உயிர்கள் கொல்லப்பட்டன. பல வீடுகள் சேதமாக்கப்பட்டன. பலர் அங்கவீனமானார்கள். இந்த செல் தாக்குதல் விடயத்தில் வெளிவராத ஒரு உண்மையும் இருந்தது.

இந்தியபடையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய ஒத்தாசைகள் | Sri Lanka India Army Ltte War Prabakaran Tamils

அதாவது இப்படியான ஒரு செல்தாக்குதலை மேற்கொண்டிருந்தவர்கள், கோட்டையில் இருந்த சிறிலங்காப் படையினர் என்பது, பின்நாட்களிலேயே தெரியவந்தது. யாழ் கோட்டையினுள் தங்கியிருந்த இந்தியப்படையினரிடம் செல்கள் எதும் இருக்கவில்லை.

அதேவேளை முற்றுகைக்குள் உள்ளாகி இருந்த இந்தியப்படையினரை உற்சாகப்படுத்த அப்பிரதேசத்தில் செல் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதும் இந்தியப்படைத் தரப்புக்கு அவசியமாக இருந்தது. அதனால், இந்தியப்படை அதிகாரிகள் சிறிலங்காப் படையினரிடம் அந்த உதவியைக் கோரி இருந்தார்கள்.

‘ஒப்பரேஷன் லிபரேசன் நடவடிக்கையைத் தொடருவதற்கு உதவியாக ஏற்கனவே பெருமளவு செல்களை கோட்டையில் இருந்த சிறிலங்காப் படைகள் தமது களஞ்சியங்களில் சேமித்து வைத்திருந்தார்கள்.

இந்தியப் படைகளின் வருகையைத் தொடர்ந்து அவற்றை பாவிக்கும் நல்ல தருனம் கிடைக்காமல் அவர்கள் பொருமிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆவலைத் தீர்த்துவைக்கும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இந்தியப் படைத்துறைத் தலைமை வழங்கியதைத் தொடர்ந்து அவர்களது செல் தாக்குதல்கள் மிகுந்த உற்சாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகின.

யாழ்ப்பாணம் மீண்டும் செல்-வந்த(?) நாடாக மாற ஆரம்பித்தது.

புதிய திட்டம்

புலிகளின் முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் நகரமுடியாதபடி பிரம்படி வீதியில் தற்காலிக தளம் அமைத்து தங்கியிருந்த இந்தியப்படை பராக் கொமாண்டோக்களை மீட்பதற்கு என்று ஒரு புதிய திட்டம் இந்தியப் படை அதிகாரிகளால் வகுக்கப்பட்டது. அந்த திட்டத்தின் விபரங்கள் சங்கேத வார்த்தைகளினுடாக பராக் கொமாண்டோக்களுக்கும் அறிவிக்கப்பட்டன.

பராக் கொமாண்டோக்களை மீட்கும் பணி 12.10.1987ம் திகதி அதிகாலை 2 மணிக்கு ஆரம்பமானது. அதிகாலை திடீரென்று வானில் தோன்றிய இந்தியப் படைக்குச் சொந்தமான ஹெலிக்காப்டர்கள் 50 மி.மீ. இயந்திரத் துப்பாக்கியால் சகட்டுமேனிக்கு சுட்டுக்கொண்டு இங்கும் அங்கும் பறந்து திரிந்தன.

ஹெலிக்காப்டர்களில் இருந்து செல்களும் ஏவப்பட்டன. இந்தியப் படையினர் ஒரு புதிய தரையிறக்கத்தை மேற்கொள்வதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கான அனைத்து எத்தனங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியப் படையினரின் தொலைத்தொடர்புச் சாதனங்களும், பிரம்படி வீதிக்கு அருகில் உள்ள வீதிகளின் பெயர்களையும், தரையிறக்கத்தை மேற்கொள்ளுவதற்கு தோதான தரை அமைப்பைக் கொண்ட இடங்களின் பெயர்களையும் அடிக்கடி குறிப்பிட்டு, இந்தியப் படையினர் மற்றொரு தரையிறக்கத்தை மேற்கொள்ள இருப்பதாக புலிகளை நம்பவைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருந்தது.

இந்தியபடையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய ஒத்தாசைகள் | Sri Lanka India Army Ltte War Prabakaran Tamils

இந்தியப் படையினரின் ஆரவாரங்களையும், பரிமாறப்பட்ட அவர்களது தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளையும் அவதாணித்த புலிகள், இந்தியப் படையினரின் புதிய தரையிறக்கம் ஒன்றை எதிர்கொள்ளுவதற்கு தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் இந்தியப் படையினர் தங்கியிருந்த கோட்டை முகாமில் இருந்தும் இந்தியப் படையினர் ஒரு நகர்வினை மேற்கொள்ள ஆரம்பிப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டார்கள்.

அந்த நகர்வினை எதிர்கொள்ளவும் புலிகளின் ஒரு அணி அங்கு அனுப்பிவைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் கவணத்தை பல திசைகளிலும் திருப்பிவிட்டு, இந்தியக் கமாண்டோக்களை மீட்பதற்கான ஒரு உண்மையான நகர்வினை மிகவும் இரகசியமாக இந்தியப் படையினர் மேற்கொண்டார்கள்.

புலிகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த நகர்வு அமைந்திருந்தது. இந்தியப் படையின் மேஜர் அனில் கவுல் என்பவர் தலைமையில் இந்தியப் படைக்குச் சொந்தமான இரண்டு டாங்கிகள் காங்கேசன் துறை தளத்தில் இருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி நகர ஆரம்பித்திருந்தன. நள்ளிரவில் டாங்கிகளின் இரைச்சல் யாழ் மக்களுக்கு புதிதாக இருந்தது.

இந்தியபடையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய ஒத்தாசைகள் | Sri Lanka India Army Ltte War Prabakaran Tamils

புலிகளின் வாகன இரைச்சலாக இருக்கலாம் என்று எண்ணி மக்கள் அவ்வளவு அக்கறை காண்பிக்கவில்லை. காங்கேசன்துறையில் இருந்து இரயில் பாதை வழியாகவே பணயம் மேற்கொண்ட அந்த இரண்டு தாங்கிகளும் சந்தடியின்றி பிரம்படி வீதியை வந்தடைந்தன.

ஏற்கனவே சங்கேத பாஷையின் மூலம் பரிமாறப்பட்டிருந்த அந்த மீட்பு நடவடிக்கை பற்றிய விபரத்தை அறிந்திருந்த பராக் கமாண்டோக்களும், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள். அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தில்தான், இந்தியக் கமாண்டோக்களின் அடுத்த கட்ட நடவடிக்கையும் எழுதப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert