April 28, 2024

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பமான தினத்திலேயே இந்தியப் படையினருக்கு ஏற்பட்டிருந்த பாரிய இழப்பானது, ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொள்ள இருந்த முழு நடவடிக்கையின் வெற்றியையுமே கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

எந்த ஒரு போர் நகர்விலும், முதலாவது வெற்றி என்பது மிகவும் முக்கியமானது என்றே அனைத்து போரியல் நிபுனர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

யுத்தம் ஆரம்பான முதல் தினங்களில் ஏற்படுகின்ற வெற்றிகள், தோல்விகள் என்பன, அந்த யுத்த நடவடிக்கையின் இலக்கையும் இறுதி முடிவையும் நிர்ணயித்துவிடுவதாக, போரியல் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

போராடும் படையினருக்கு மனோதத்துவ ரீதியில் உற்சாகத்தையும், தைரியத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில், இலகுவாக வெற்றிகொள்ளக்கூடிய ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதனைக் குறிவைத்துத்தான் எந்த ஒரு தலைவனும் தனது முதலாவது தாக்குதல் திட்டத்தை வகுப்பது வழக்கம்.

ஏனெனில் எந்த ஒரு யுத்த நடவடிக்கைக்கும், முதல் ஓரிரு நாட்களில் ஏற்படுகின்ற தோல்விகள், அந்த நடவடிக்கையின் இறுதி வெற்றிக்குப் பாரிய பின்னடைவைத் தந்துவிடும் என்பதே போரியல் யதார்த்தம்.

 இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட ஒப்பரேஷன் பவான் (Operation Pawan) இராணுவ நடவடிக்கையும் படு தோல்வியில் முடிவடைவதற்கு, ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள்தான் காரணம் என்று போரியல் அறிஞர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.

இந்தியப் படையினர் தமது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த தினமே, பாரிய இழப்புக்ளைச் சந்தித்திருந்தார்கள்.

ஒப்பரேஷன் பவான் 

புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்கு என்று பல்கலைக் கழக மைதானத்தில் தரையிறக்கப்பட்ட துருப்பினர் அனைவருமே ஒட்டுமொத்தமாக புலிகளினால் அழிக்கப்பட்ட நிகழ்வானது, தொடர்ந்து உற்சாக மனோபாவத்துடன் போராடும் இந்தியப்படையினரின் மனநிலையை சிதைத்துவிட்டிருந்தது.

அதுவும், இந்திய இராணுவத்தின் அதி உச்ச பயிற்சியைப் பெற்றவர்கள் என்றும், இந்திய இராணுவத்தின் சிறந்த, சாகாசம் புரியக் கூடிய வீரர்கள் என்றும், ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும் குடியிருந்த இந்தியப் பராக் கமாண்டோக்கள் (Para Commandos), புலிகளின் பொறியில் மாட்டி தடுமாறிய சம்பவம், பரிதாபமாக உயிரை இழந்திருந்த சோகம் என்பன, ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும், கிலேசத்தை ஏற்படுத்தியிருந்தது.

‘புலிகளை இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம், “இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான் இந்தச் சண்டைகள், அதன் பின்னர் புலிகள் சரனடைந்து விடுவார்கள் என்றெல்லாம் தமது தளபதிகள் கூறியதை நம்பி உற்சாகத்துடன் களமிறங்கியிருந்த இந்தியப் படை வீரர்களுக்கு, தாம் நினைத்தபடி களமுனை இலகுவான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்று முதன்முதலில் புரிய ஆரம்பித்திருந்தது.

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம் | Ltte War Srilanka India Prabakaran Tigers Rajivgan

சாதாரண இந்தியப் படை ஜவான்களின் மனங்களில் ஏற்பட ஆரம்பித்திருந்த இந்த வகை மனவோட்டம், களமுனைகளில் இந்தியத் தரப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவை பெற்றுத் தந்திருந்தது.

தொடர்ந்து நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள முடியாமல் போனதற்கும், ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியே பிரதான காரணம் என்று கூறப்படுகின்றது.

இந்தியாவின் யுத்த வரலாற்றில், அது தனது யுத்த தந்திரங்களை மாற்றியமைக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகவும், யாழ் பல்கலைக்கழக தரையிறக்கம் இந்தியப் படைத்துறைத் தளபதிகளுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருந்தது.

அதுமட்டுமல்ல, பின்நாட்களில் ஈழ மண்ணில் இருந்து இந்தியப் படைகள் பின்வாங்கிய பின்னரும் கூட, இந்தியப் படைத்தளபதிகளும், இராஜதந்திரிகளும் தமக்குள் பெருமிக்கொண்டும், தம்மிடையே சண்டைகள் பிடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் இருப்பதற்கு காரணமாக அமைந்த ஒரு சம்பவமாக, அன்றைய அந்தத் தரையிறக்கத் தோல்விகள் அமைந்திருந்தன.

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்

புலிளுடனான தாக்குதலை நெறிப்படுத்திய இந்தியப் படை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் கருத்து தெரிவிக்கையில், முதலில் புலிகளுடன் நாம் எதற்காக மோதுகின்றோம் என்று எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை. எந்த ஒரு தாக்குதலுக்கும், யுத்தத்திற்கும் ஏதாவது ஒரு குறிக்கோள் இருப்பது அவசியம்.

ஆனால் புலிகளுடன் நாம் ஆரம்பித்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை. அன்று தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் எனக்கு ஒன்பது ஹெலிக்காப்டர்கள் தேவை என்று கேட்டிருந்தேன்.

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம் | Ltte War Srilanka India Prabakaran Tigers Rajivgan

தரையிறங்கிய துருப்பினருக்கு வானில் இருந்து தேவையான ஆதரவை வழங்குவதற்கென்று இதனை நான் கோரி இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அவை மறுக்கப்பட்டிருந்தது. முக்கியமாக இந்திய அமைதிகாக்கும் படையின் யுத்த நடவடிக்கைகளை வெறும் அரசியல் இராஜதந்திரியான தீட்ஷித் நெறிப்படுத்த ஆரம்பித்ததுதான் அனைத்தும் பிழையாகிப் போவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது.

இவ்வாறு ஹரிகிரத் சிங் தெரிவித்திருந்தார்.

கொமாண்டரின் முட்டாள்தனம்

புலிகளை வழைத்துப் பிடிப்பதற்கு என்று கூறி இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அந்த தரையிறக்கம் பற்றி பின்நாட்களில் கருத்து தெரிவித்த முன்நாள் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீக்ஷித், “அது இந்தியப் படை கொமாண்டரது முட்டாள்தனமான நடவடிக்கை|என்று விமர்சித்திருந்தார்.

“மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் மேற்கொண்ட முட்டாள்தனமான தரையிறக்க நடவடிக்கையினால்தான் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம் | Ltte War Srilanka India Prabakaran Tigers Rajivgan

பூரண நிலவில், புலிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் ஹெலிக்காப்டர் தரையிறக்கத்தை மேற்கொள்வதை, முட்டாள்தனம் என்று குறிப்பிடாமல் வேறு எவ்வாறு கூறமுடியும்? இந்தியப் படையினரின்; திட்டத்தை தொலைத் தொடர்பு பரிமாற்றங்களின் போது புலிகள் நிச்சயம் ஒட்டுக்கேட்டிருப்பார்கள் என்பதை இந்தியப் படை அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் ஒரு நல்ல அதிகாரி கிடையாது. இலங்கையில் இந்தியப் படைக்கு கிடைத்த முதலாவது ஜெனரல் ஒரு முட்டாள் என்பது எமக்கு ஒரு பெரிய பின்னடைவே என்று குறிப்பிட்டிருந்தார். மேலதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை.

புலிகள் மீது இந்தியப் படைகள் மேற்கொண்ட திடீர் தாக்குதல் முயற்சி பற்றி ஜெனரல் கல்கட் பின்நாட்களில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில்,  யாழ் குடாவை கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டப்படும்போது நானும் அங்கிருந்தேன்.

விடுதலைப்புலிகளின் பலம்

உண்மையிலேயே அது நல்லதொரு திட்டமாகவே இருந்தது. அதேவேளை நடவடிக்கைகள் பிழைத்தது பற்றி நான் கருத்துக் கூறுவது அவ்வளது நல்லதாக இருக்கமாட்டாது. ஏனெனில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்போது நான் அங்கு இருக்கவில்லை.

அன்றைய கள நிலவரங்களையும், தேவைகளையும் அடிப்படையாக வைத்துத்தான் நடவடிக்கை தொடர்பான முடிவை ஜெனரல் எடுத்திருப்பார். அதனால் அந்த நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நான் தீர்ப்புக் கூறுவது பொருத்தமல்ல.

ஆனால் ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். அவர் எடுத்திருந்த எந்த ஒரு முடிவையும் அவர் தனது மேலதிகாரிகளுடன் நிச்சயம் கலந்தாலோசித்திருக்கவேண்டும். யாழ்ப்பாண தரையிறக்க விடயத்தைப் பொறுத்தவரை அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் பலம், அவர்களிடமுள்ள ஆயுதங்களின் விபரங்கள், என்பன தெரியாமல் நேரடியாகச் சென்று அவர்களைத் தாக்க முற்பட்டதே எமது பின்னடைவிற்கு காரணம் என்று நான் நினைக்கின்றேன்.

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம் | Ltte War Srilanka India Prabakaran Tigers Rajivgan

அதேவேளை, இந்தியப் படையினருக்கு புலிகள் தொடர்பாக வழங்கப்பட்டிருந்த பிழையான தகவல்களும், பிழையான முடிவை நாம் மேற்கொள்ளக் காரணமாக அமைந்திருந்தது என்ற உண்மையையும் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

புலிகள் ஒருபோதும் இந்தியப் படையினரைத் திருப்பித்தாக்கமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருந்த புலனாய்வுத் தகவல்களும் எங்களை பிழையாக வழிநடத்தியிருந்தன. இவ்வாறு ஜெனரல் கல்கட் தெரிவித்திருந்தார்.

ஆகமொத்தத்தில், இலங்கை வந்த இந்திய உயரதிகாரிகள் அனைவரும் இந்தியா திரும்பியதும், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி அடித்துக்கொள்ளும் அளவிற்கு, ஈழமண்ணில் பாரிய தோல்வியை விடுதலைப் புலிகள் அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

இன்று கூட, இந்தியப் படைகளின் அந்த அக்டோபர் நடவடிக்கை பற்றி எழுதும், பேசும் அனைத்து அறிஞர்களும், அன்றைய தினத்தில் இந்தியப் படைகளுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் எப்போதுமே ஏற்பட்டுவிடக்கூடாது என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.

இந்தியப் படையினருக்கு அந்த இரவில் ஏற்பட்ட கெட்ட கனவு அன்றுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. அதுபோன்ற பல கெட்ட கனவுகளை ஈழ மண்ணில் இந்தியப் படைகள் தொடர்ந்தும் காண நேர்ந்தது.

இந்திய அரசியல்வாதிகள் ஈழத்தமிழருக்கு தொடர்ந்து செய்துவந்த துரோகங்களின் தண்டனையை, பாவம் இந்தியப் படை ஜவான்களே அறுவடை செய்ய நேர்ந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய சோகம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert