April 28, 2024

யாழ் குடாவில் பிணக் குவியலில் புலர்ந்த பொழுது

யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் ஒரு தற்காலிக தளத்தை அமைத்து நிலைகொண்டபடி புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த பராக் கொமாண்டொக்களை மீட்பதற்காக, இந்தியப் படையினரின் இரண்டு யுத்த தாங்கிகள் காங்கேசன்துறை இராணுவ முகாமிலிருந்து புறப்பட்டன.

வீதிகளில் புலிகள் சென்றி அமைத்து நிலைகொண்டபடி அனைத்து திசைகளிலும் இருந்து முன்னெற ஆரம்பித்திருந்த இந்தியப் படைகளின் பல்வேறு அணிகளையும் எதிர்த்துக் கடுஞ் சமர் புரிந்து கொண்டிருக்கையில், யுத்த தாங்கிகளின் மீட்பு நகர்வு மிகவும் இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை இந்த இரகசிய நடவடிக்கை பற்றிய விபரங்கள் சங்கேத மொழிகளில் தொலைத்தொடர்பு கருவிகளின் ஊடாக பராக் கொமாண்டோக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர்களும் டாங்கிகளின் வருகையை எதிர்பார்த்து ஒரு பாதையில் நிலைகொண்டபடி தயார் நிலையில் இருந்தார்கள். காங்சேன்துறையில் இருந்து தொடருந்து பாதை வழியாகவே மெல்ல மெல்ல நகர்ந்த அந்த இரண்டு யுத்ததாங்கிகளும், பிரம்படி வீதியின் அருகில் வந்ததும் திடீரென்று ஊருக்குள் திரும்பின.

இந்திய இராணுவத்தின் முற்றுகை நகர்வுகள்

நள்ளிருட்டு இந்த தாங்கிகளின் வருகையை மறைத்துவிட்டிருந்தது. பல்வேறு திசைகளில் இருந்தும் யாழ்ப்பாணத்தை நோக்கிய இந்திய இராணுவத்தின் முற்றுகை நகர்வுகள் ஆம்பமாகி விட்டிருந்த நிலையில், புலிகளின் கவனம் முழுவதும் அந்த முன்நகர்வுகளை எதிர்கொள்வதிலேயே இருந்தன.

யாழ் குடாவில் பிணக் குவியலில் புலர்ந்த பொழுது...! | Jaffna Ltte War Atteck India Death Prabakaran Sl

வானில் வட்டமிட்டபடி சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்த ஹெலிக்காப்டர்களை எதிர்கொண்டு சண்டையிடவேண்டிய தேவையும் புலிகளுக்கு உருவாகி இருந்தது.

யாழ் கோட்டையில் இருந்து நிமிடத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் பொழியப்பட்டுக்கொண்டிருந்த செல் மழையில் இருந்து தப்பவேண்டிய கட்டாயமும் புலிகளுக்கு இருந்தது.

ஏற்கனவே யாழ்க்குடாவில் ஆரம்பமாகி இருந்த மக்கள் இடப்பெயர்வுக்கு உதவவேண்டிய நெருக்குதல்களும் புலிகளது உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

அடுத்ததாக வானில் இருந்து மற்றுமொரு தரையிறக்கம் திடீரென்று இடம்பெறலாம் என்று எதிர்பாத்து புலிகளின் சில படையணிகள் பரவலாகவும் நிலைகொண்டு காத்திருந்தன.

புலிகளின் முக்கிய படையணிகளின் கவனம் பல்வேறு திசைகளிலும் திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில் சந்தடியில்லாமல் நகர்ந்து பிரம்படி வீதியை வந்தடைந்த யுத்த தாங்கிகள் அங்கு தமது ருத்திர தாண்டவத்தை ஆரம்பித்தன.

தொடருந்து பாதையை அண்டி கட் அவுட் நிலை எடுத்திருந்த புலிகளின் ஒரு சிறு அணியால் முற்றிலும் இரும்பினாலான அந்த யுத்த தாங்கிகளின் நகர்வை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்தியப் படையினருக்கு வெற்றி

அவர்கள் துப்பாக்கி வேட்டுக்கள் அனைத்தும் கடினமான உருக்கு இரும்பினாலான அந்த தாங்கிகளின் உடம்பில் பட்டு தெறித்தனவே தவிர பாதிப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தாங்கி வந்து சேர்ந்த இடம் எது என்று பார்ப்பதற்காக தனது தலையை வெளியே நீட்டிய மேஜர் அனில் கவுல் என்ற அதிகாரி சூட்டுக் காயத்திற்கு உள்ளாகி இருந்தார்.

அவரது ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. மற்றப்படி அந்த மீட்பு நடவடிக்கை இந்தியப் படையினருக்கு வெற்றிகரமானதாகவே அமைந்திருந்தது.

யாழ் குடாவில் பிணக் குவியலில் புலர்ந்த பொழுது...! | Jaffna Ltte War Atteck India Death Prabakaran Sl

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படையினர் தமது உயிர்களைக் கைகளில் பிடித்தபடி பிரம்படி வீதிச் சுற்று வட்டாரத்தில் நிலையெடுத்திருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்கள், தமது மீட்பு உறுதியாகிவிட்ட சந்தேசத்தில் அதுவரை அடக்கி வைத்திருந்த தமது கோபத்தை அப்பிரதேச மக்களின் மீது செலுத்த ஆரம்பித்தார்கள்.

அங்கிருந்த வீடுகளை எரித்தார்கள். கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினார்கள். பிரம்படி வீதியை வந்தடைந்த யுத்த தாங்கிகள் கூமார் 40 நிடங்கள் வரை அப்பிரதேசத்தில் நின்றன.

கொல்லப்பட்ட எட்டு இந்தியப் படைவீரர்களின் உடல்கள் மற்றும் படுகாமடைந்த ஆறு படைவீரர்கள் யுத்த டாங்களினுள்ளே ஏற்றப்பட்டும்வரை அங்கு கொடூரச் சம்பவங்கள் பல இடம்பெற்றன.

இந்திய இராணுவ வீரர்களால் தமது பாதுகாப்பிற்கென பணயக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த பலரும் கயிற்றினால் பிணைக்கப்பட்டு தாங்கிகளின் சங்கிலிச் சில்லுகளின் கீழே கிடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.

அவர்களின் உடல்கள் நசுங்கிச் சிதைந்தன. ஏற்கனவே இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டவர்கள் மற்றும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களும் டாங்கிகளால் மிதித்து சிதைக்கப்பட்டார்கள்.

இந்தியப் படைக்கொமாண்டோக்களை ஏற்றிக்கொண்டு திரும்பிய டாங்கிகள் அங்கிருந்த சில வீடுகளையும், கட்டிடங்களையும் குண்டு வீசித் தகர்த்துவிட்டும் சென்றன.

பிணக் குவியல்களில் புலர்ந்த பொழுது

மறுநாள் பொழுது பிணக் குவியல்களின் காட்சியாகவே புலர்ந்தது. டாங்கிகள் வந்து சென்ற வீதிகள் முழுவதுமே பிணங்கள் சிதைவடைந்து சிதறிக் காணப்பட்ட காட்சி யாழ் மக்களுக்கு பதிதான ஒன்றாகவே இருந்தது.

சிறிலங்காப் படைகளுடனான இத்தனை வருட கால கொடிய யுத்தத்திலும், இதுபோன்ற ஒரு காட்சியை யாழ்மக்கள் காணவில்லை. சிறிலங்கா விமாணங்களின் குண்டு வீச்சுக்கள், படுகொலைகள், சுற்றிவளைப்புக்கள், இனஅழிப்பு நடவடிக்கைகள் என்று எத்தனையோ அழிவுக் காட்சிகளை யாழ் மக்கள் பார்த்து அனுபவித்திருந்த போதிலும், அன்றைய நாளில் டாங்கிகளால் சிதைக்கப்பட்ட நிலையில் மனித உடல்கள் சிதறிக்கிடந்ததான அந்தக் காட்சி அவர்களுக்கு அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்துவதாகவே இருந்தது.

யாழ் குடாவில் பிணக் குவியலில் புலர்ந்த பொழுது...! | Jaffna Ltte War Atteck India Death Prabakaran Sl

அதுவும் தங்களைக் காப்பதற்கென்று வந்திருந்த இந்தியப் படையினர் இப்படி ஒரு அட்டூழியத்தைச் செய்திருந்தார்கள் என்பதை அவர்களால் ஜீரணிக்கமுடியாமலும் இருந்தது.

அப்பிரதேசத்தில் 40 இற்கும் மேற்பட்ட உடல்கள் டாங்கிகளினால் ஏற்றப்பட்டு சிதைந்து சின்னாபின்னமாகிப்போய் காணப்பட்டன.

அங்கும் இங்கும் சிதறிக்கிடந்த அந்த உடல்கள், உடலின் பாகங்கள், எஞ்சியிருந்த பிரதேசவாசிகளினாலும், சில விடுதலைப் புலி உறுப்பினர்களாலும் சேகரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு ஏரியூட்டப்பட்டன.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்தியப் படையினரின் படுகொலைகள் அன்றுடன் முடிந்துவிடவில்லை. இந்தியப் படைகள் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த அந்த இரண்டு வருட காலப்பகுதிகளிலும் அவை தொடரவே செய்தன.

அன்று எரிக்கப்பட்ட அந்தப் பிணக் குவியல்கள், அடுத்த சில நாட்டகளில் இந்தியப் படையினர் ஈழ மண்ணில் ஆட இருந்த கோரதாண்டவம் பற்றிய செய்தியை முன் அறிவித்தபடி எரிந்துகொண்டிருந்தது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert