Mai 9, 2024

ஈ.பி.டி.பி யின் நிலைப்பாடே அமெரிக்காவின் நிலைப்பாடாம்

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது என அக்கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இந்நிய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதிலும், குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக கொண்டு, அதிலிருந்து நாம் முன்னேறி மேலும், அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்தி வந்திருக்கின்றது.

இந்நிலையில், எமது மக்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை விளங்கிக்கொண்ட உலக வல்லரசான அமெரிக்கா இன்று சில நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் கட்சிகளை அழைத்து 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது புத்திசாலித்தனமானது என்ற கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த விடயமானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீர்க்கதரிசனமான தூர நோக்கு கொண்ட அரசியல் தீர்வு முயற்சிக்கான ஓர் அங்கீகரமாகவே நாம் பார்க்கின்றோம்.

ஏற்கனவே சர்வதேசம் எமது பிரச்சினையில் தலையிடாது எமது பிரச்சினைகளுக்கான தீர்வை நாமே தேடிக்கொள்ள வேண்டும் என எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியபோது சில அரசியல் கட்சிகளும் ஆய்வாளர்களும் அதனை பொருட்படுத்தாது ஒரு மலினமான கூற்றாக விமர்சனம் செய்திருந்தனர்.

ஆனால் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சில அரசியல் கட்சிகளுடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் சர்வதேசம் ஒரு வரையறைக்கு மேல்  இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது என அழுத்தம் திருத்தமாக சொல்லியிருந்தார்.

அவ்விடயத்தையும் நாங்கள் நீண்டகாலமாக சொல்லிவந்ததே நடைமுறையில் சர்வதேசமும் ஏற்றுக்கொண்டது. இதுவும் எமது நிலைப்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

ஆயினும் சிலர் வாக்கு வங்கிகளையும் நாடாளுமன்ற ஆசனங்களையும் இலக்குவைத்து நடைமுறைச் சாத்தியமற்ற வெற்று வாக்குறுதிகளையும் ஆக்கிரோச கருத்துக்களையும் கக்கிய வண்ணமே இருந்தனர்.

இன்று உலக வல்லரசான அமெரிக்கா எனது நிலைப்பாட்டை படிப்படியாக வெளிப்படுத்திவரும் நிலையில் ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு அங்கீகாரம் பெற்றுவருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert