Mai 19, 2024

புதைகுழிகளின் மேல் விகாரைகளா?

முல்லைத்தீவு மாவட்டத்தில், சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள, பாரிய விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக வட்டுவாகல் மற்றும், கேப்பாப்புலவு உள்ளிட்ட இராணுவமுகாம்களில் பாரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரைகளைச் சுட்டிக்காட்டிய ரவிகரன்,  இராணுவ முகாம்களில் அவ்வாறு பாரிய அளவில் விகாரைகள் நிர்மாணிக்கப்படவேண்டிய அவசியம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்தொடர்பில் பார்வையிட்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் பகுதி நீண்டகாலமாக ஒரு சூனியப் பிரதேசமாக இருந்த ஒரு பகுதியாகும். கடந்த 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இங்கிருந்த தமிழ் மக்கள் அனைவரையும் இராணுவம் வெளியேற்றியது. அப்போதிருந்து நீண்ட காலமாக கொக்குத் தொடுவாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு சூனியப் பகுதியாக காணப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் மௌனிக்கப்பட்டபோது சரணடைந்தவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு சில இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக நாம் அறிகின்றோம்.

அவ்வாறு சரணடைந்தவர்கள்கூட இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்டு, பின்னர் இராணுவ சூனியப் பிரதேசமான இங்கே கொண்டுவந்து புதைக்கப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புக்கள்கூட இருக்கின்றன.

தற்போது இங்கே அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளும்போது பல மனித எச்சங்கள் தொடர்ந்தும் தென்படுவதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் இங்கு அகழ்வுப் பணிகள் முறையாக இடம்பெறுவதாக எமக்குத் தெரியவில்லை. இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பாதுகாப்பின்றி பெட்டிகளில் வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

எனவே சரியானவிதத்தில் இந்த அகழ்வுப்பணிகளுடைய முடிவுகள் இருக்குமா என்பதிலும் எமக்கு சந்தேகமிருக்கின்றது.

சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இந்த அகழ்வுப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்பதுடன், சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில், சர்வதேச நியதிகளைப் பின்பற்றி இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெறவேண்டும் என்பது எமது கோரிக்கையாகவிருக்கின்றது.

இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்காது, சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, இங்கு புதைக்கப்பட்டிருப்பதாகவே மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இதனைவிட இங்குள்ள முக்கியமான இராணுவ முகாம்களில், குறிப்பாக வட்டுவாகல், கேப்பாப்புலவு, போன்ற இடங்களில் பாரிய புத்தவிகாரைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஆனால் அவ்வாறு பாரிய அளவில் இராணுவமுகாம்களில் விகாரைகள் அமைக்கவேண்டிய தேவையில்லை.

பல இராணுவ முகாங்களில் சிறிய அளவிலான விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கும்போது கேப்பாப்புலவு, வட்டுவாகல் உள்ளிட்ட சில இராணுவமுகாம்களில் இவ்வாறு பாரிய அளவிலான விகாரைகள் நிறுவப்பட்டுள்ளதன் சூட்சுமம் என்ன?

 இவ்வாறான இராணுவமுகாம்களில் அமைந்துள்ள விகாரைகளின் கீழ்பகுதிகளில், இறுதிக்கட்டப் போரில் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் புதைக்கப்புட்டுள்ளதா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

எனவே இவ்வாறான இராணுவ முகாம்கள், இராணுவ முகாம்களிலுள்ள பாரிய விகாரைகளையும் சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் அகழ்ந்து ஆராய்வதற்குரிய சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

ஏன் எனில் யுத்தம் மௌனிக்கப்பட்டு சுமார்14ஆண்டுகளுக்கு மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது காணாமல் ஆக்கப்பட் உறவுகளைத் தேடித் தொடர்ந்து போராடிவருகின்றனர். ஆனால் தொடர்ந்து மாறிவரும் அரசாங்கங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு உரிய பதிலை வழங்குவதாகத் தெரியவில்லை.

இந் நிலையில் போர்மௌனிக்கப்பட்டபோது கையளிக்கப்பட்ட உறவுகளின் நிலை என்ன? அது தொடர்பில் இலங்கை அரசு இதுவரையில்  முறையான பதிலை வழங்காததன் காரணமென்ன?

எனவே எமது மக்களின் வலியுணர்ந்து சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில், சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதியானதும் நியாயமானதுமான விசாரணையை கோருகின்றோம். அதனடிப்படையில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – என்றார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert