April 27, 2024

தீர்வினை வழங்க இந்தியா உதவி செய்யவேண்டும்:அரவிந்தன்

இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை பாதுகாக்கின்ற பொறுப்பு இந்தியாவிற்கே உள்ளது அதிலும் தமிழ் நாட்டில்வாழ்கின்ற மக்களும் இந்திய அரசாங்கத்திற்குமே உண்டு . அத்தகைய ஒரு நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமான தீர்வினை நோக்கி பயணிப்பதற்கு இந்தியா எமக்கு உதவி வழங்கவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியஸ்தரும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ச.அரவிந்தன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடகிழக்கு உட்பட பல்வேறு இடங்களக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புக்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார் இதன் வெளிபாடாக இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள 13 ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடான மாகாணசபை நடைமுறைகளை அமுல்படுத்துமாறு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில் 13 ஆம் திருத்தச் சட்டம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள மாகாணசபை முறைமையானது தற்போதைய நிலையில் பல சட்டங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் ஒன்று கொண்டுவரப்படுமேயானால் அது வெறும் அமைப்பாகவே காணப்படும் எனவே இந்திய அரசாங்கம் எத்தகைய சூழலுக்கு ஏற்ப மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டதே அத்தகை முழுமையான சட்ட வரைபுகளும் உள்ளடக்கப்பட்டதாக தேர்தல் அமைக்கப்படவேண்டும். தேர்தல் முறைமை எவ்வாறு அமையும் என்பதை விட உருவாக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் முழுமையாக அமுல் படுத்தப்படுகின்ற அமைப்பாக இரு உருவாக்கப்படவேண்டும். அதிலும் குறிப்பாக வட கிழக்கு பகுதியைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியம் சார்ந்து செயற்படுகின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருமித்த அமைப்பாக ஒரு அமைப்பை உருவாக்கி தேர்தலில் முன்நிற்கவேண்டும் . அத்தகைய அமைப்பானது சர்வதேச ரீதியாக ஒருமித்த குரலில் தமிழ் மக்களின் தேவைகளை கோரிக்கைகளை முன்வைக்கின்ற நிலையினை உருவாக்கவேண்டும் எத்தகைய கட்சிகள் இருந்தாலும் கட்சிக்குள்ளே தங்களுடைய முரண்பாடுகளைத் தீர்த்து மக்களின் தேவைகள் எதுவே அதனையே வெளிப்படுத்தகின்ற நிலை உருவாக்கவேண்டும்.

இதேவேளை இலங்கை இந்திய மீனவர்களை முரணடைய வைத்து ஒரு சில விசமத்தனமான செயற்பாடுகள் மீனவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடையத்தில் இரு தரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு விசமிகளை அடையாளம் காணவேண்டும். அண்மையில் யாழ்.குருநகர் கடற்பரப்பில் இடம்பெற்ற வன்முறையானது அத்தகைய ஒன்றாகவே கருதப்படுகின்றது இந்தச் சம்பவம் தொடர்பில் இந்திய கடற்றொழில் அமைச்சரும் சில கடற்றொழில் சங்கங்களும் முறையான வகையில் செயற்பட்டு நட்டஈடு வழங்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள் . இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.

மேலும் பண்டேரா ஆவணத்தில் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் ஒருவரது பெயரும் காணப்படுகின்றது. இவ்வாறான ஆவணத்தில் இலங்கையர்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச ரீதியில் தான் அனுமதி வழங்கப்படவேண்டும். காரணம் இலங்கையில் கடந்த காலங்களில் பல விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டபோதும் அவை முழுமையான விசாரணை அறிக்கைகளை வெளிப்படுத்தவில்லை குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைக்குழுக்கள் அண்மையில் சிறைச்சாலையில் இடம் பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் மீது வன்முறை பிரயோகம் என பல விசாரணைக்குழுக்ககள் உருவாக்கப்பட்டும் அவை தொடர்பான அறிக்கைகளே அதற்கான பரிகார நீதிகளே வெளிப்படுத்தப்படவில்லை இவ்வாறான நிலையில் பண்டேரா ஆவணம் தொடர்பாக சர்வதேச ரீதியிலே விசாரணைகள் செய்யப்படவேண்டும் இன்றைய ஆட்சியில் உள்ள அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள் ஆனால் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் அச்சமூட்டுகின்ற செயற்பாடுகளைத்தான் இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முதலில் இலங்கையில் வாழ்கின்ற அனைத்துத் தமிழ் மக்களுக்கும் நல்லிணக்கத்தை காண்பிக்கும் வகையில் காணாமல் போனோர் விடையம் மற்றும் அரசியல் கைதிகள் விடையம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை வெளிப்படுத்தவேண்டும் அரசியல் கைதிகள் விடையத்தில் பொது மன்னிப்பு வழங்கி அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மரணச்சான்றிதழ்கள் வழங்குவதாக கூறும் அரசாங்கம் முதலில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெளிவான விடையத்தை வெளிப்படுத்தவேண்டும் என்றார்.