Mai 4, 2024

ராஜபக்ச அரசுக்கு சவால் விடுத்துள்ள தேரர்

ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் சாமான்ய மக்களின் கருத்திற்கு செவிசாய்க்காமல் செயற்படுவதால், சுயமாக ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம் முடிந்தால் மாகாண சபை அல்லது பொதுத் தேர்தலை நடத்திக்காட்டுமாறு சவால் விடுத்துள்ள தேரர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள அரசாங்கத்திற்கு மூன்றில் ஒரு பெரும்பான்மையையேனும் பெற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில், அபயராமை விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இரவு நேர ஊரடங்கு சட்டம் வௌவால்களுக்காகவா? அமுல்படுத்தியுள்ளீர்கள் அல்லது ஆந்தைகளுக்காகவா?

ஆட்சியாளர்கள் சாமான்ய மக்களின் கருத்தை கேட்காமல், அவர்கள் நினைத்ததை போன்று ஆட்சி செய்ய முற்படுவார்களாயின் நமக்கென்று சுயமாக ஒரு ஆட்சியை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

நான் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன், முடிந்தால் மாகாண சபை அல்லது பொதுத் தேர்தலை நடத்திப்பாருங்கள் எத்தனை வாக்குகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். முடிந்தால் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள். மூன்றில் ஒன்றுகூட கிடைக்காது.

நான் நினைகின்றேன் ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு நடந்ததுதான் நடக்கும் போல் தெரிகின்றது. அன்று ஜே.ஆர்.ஜயவர்தன ஆறில் ஐந்து பெரும்பான்மையை பெற்றார். ஆனால் அடுத்த தேர்தலிலேயே அக்கட்சியின் எம்.பிக்கள் எண்ணிக்கை 8ஆக குறைந்தது. இதற்கு பிரதான காரணம் மக்களின் கோரிக்கைக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. அந்த நிலைமை தான் உங்களுக்கும் வரப்போகின்றது.

கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களே, சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சு கடந்த நாட்களில் சுகாதாரமற்ற ஒரு அமைச்சாகவே காணப்பட்டது. பவித்ரா வன்னியாராச்சி செய்த வேலைகளை நாம் மறக்கமாட்டோம். அவர் நிறைய வேலைகள் செய்தார்.

இருந்தாலும் தலைவலிக்கு தலைவாணியை மாற்றியதை போல் அமைச்சரவையை மாற்றி இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.

நீங்கள் பொறுப்பேற்றது ஒரு பெரிய குப்பைக் கிடங்கு. இந்த குப்பையை சுத்தம் செய்ய உங்களுக்கு திறமை இருக்க வேண்டும். அப்படி நீங்கள் சுத்தம் செய்யாவிட்டால் உங்களுக்கு இந்த பயணத்தை தொடர முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.