Mai 3, 2024

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு! அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன நாட்டில், வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கிறது.

நாட்டை முழுமையாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை. எனினும், தேவைப்படும் போது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆக உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து, பயணக் கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் முன்னர் தென்னிலங்கை ஊடகங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையிலேயே அமைச்சரும் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.