Mai 2, 2024

தொடரும் போராட்டங்கள் – பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிறுவனங்கள்?

இலங்கையில் ஆசிரியர்களும், பாடசாலை அதிபர்களும் நடத்திவருகின்ற போராட்டங்களுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தொழில் அமைச்சர் காமினி லொக்குகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

2014, 2015ஆம் ஆண்டு காலகட்டம் எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றது. இன்றைய காலத்தில் வீதிக்கு இறங்கியுள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும் அன்றைய கட்டத்திலும் போராட்டங்களை நடத்தினார்கள்.

அன்று, பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் வரவு செலவுத் திட்டத்தில் 7 வீதத்தை ஒதுக்கீடு செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்தார்கள். அதன் பின் எமது ஆட்சி கவிழ்ந்தது.

நல்லாட்சி வந்தபோது நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டார். 7 வீதம் ஒதுக்கப்பட்டதா? இல்லை. 05 வருடங்களாக ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அனைவரும் சர்வதேசத்தின் தேவைக்காகவும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்கவுமே செயற்பட்டார்கள்.

சர்வதேசம் விடுதலைப் புலிகளுடன் இருந்தபோது, புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் மௌனிக்கச் செய்த படியினால் ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிக்கவே அன்று முயற்சிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது சர்வதேச தரப்பினர் முன்வைத்தார்கள்.

ஆசிரியர்கள், அதிபர்களுக்கு தீர்வை வழங்க இப்போதே 56 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கமுடியாது. அடுத்துவரும் வரவு செலவுத்திட்டத்தின்போது பொருத்தமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளும்.

கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை இன்று செய்கின்றவர்கள் தான் அன்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தும்படி கோரினார்கள் என்றார்.