Mai 17, 2024

என் பாதை தனிப்பாதை:கோத்தா!

2025 ஜனாதிபதி தேர்தல் கனவிலுள்ள கோத்தபாய ”ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை இத் தருணத்தில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது” என அறிவித்துள்ளார்.

நாள் தோறும் ஆசிரிய போராட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டுவருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே வட மாகாண சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் ‘தமக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்திற்கு அமைவாகத் தமது  பணிகளைப்பொறுப்பேற்க அனுமதிக்குமாறு கோரி‘ நேற்றைய தினம்(02) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 155 நாட்களாகக் குறித்த செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ,ஏற்கனவே யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி அவர்களை கொழும்பிற்கு வருமாறும் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறிச் சென்றதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது குறித்த சுகாதார தொண்டர்களை ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்குள் உள்  வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்துக் குறித்த போராட்டம் கைவிடப்பட்ட  நிலையில் அவர்களுக்குரிய வேலை வாய்ப்பு தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படாததன்  காரணமாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.