Mai 6, 2024

பொன்னாலை ஸ்ரீகண்ணன் மடாலயம் நடாத்திய சைவநெறிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீகண்ணன் அன்னதான மடாலயம் மாணவர்களுக்கு இடையே நடத்திய சைவநெறி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா மேற்படி மடாலயத்தின் தற்காலிக மண்டபத்தில் இடம்பெற்றது. 

மடாலய தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, பரீட்சையில் சித்தியடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு புத்தகங்கள், கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், மாணவர்கள், விருந்தினர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், கீரிமலை மெய்கண்டார் ஆதீன முதல்வர் உமாபதிசிவம் அடிகளார், வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர் எஸ்.விஜயேஸ்வரன், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார், பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை அதிபர் தி.மோகனபாலன், பொன்னாலை கிராம சேவையாளர் ப.தீசன், வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், ஸ்ரீகண்ணன் அன்னதான மடாலய பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு இடையே இறை நம்பிக்கை குறைந்து செல்வதால் அவர்கள் பாடசாலைக் காலத்தின் பின்னர் வன்முறை, குரோத மனப்பான்மை உடையவர்களாக மாறுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை குறைக்கும் நோக்கத்துடன் தாங்கள் இந்த அறநெறி செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர் என பொன்னாலை ஸ்ரீகண்ணன் மடாலாலய தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.பொன்ராசா தெரிவித்தார்.