April 28, 2024

ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்பு

ஜெர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ஜெர்மனி நாட்டின் சொலிங்கின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6 குழந்தைகளுடன் ஒரு பெண் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் தாய் சொலிங்கின் நகர போலீசாரை தொடர்பு கொண்டு தனது மகளின் வீட்டில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு விரைந்த போலீசார் அந்த பெண் தனது 6 குழந்தைகளுடம் வசித்துவந்த பிளாட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு 5 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்தன. ஒரே குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த குழந்தைகளின் தாயை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அந்த பெண் தனது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள டுஸ்சில்டோர்ஃப் ரெயில் நிலையித்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண் தனது குழந்தைகள் 5 பேரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் என்பதால் சிகிச்சைக்கு பின் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் அல்லது எவ்வாறு குழந்தைகள் உயிரிழந்தன என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 3 பெண்குழந்தைகளும், 2 ஆண்குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த குழந்தைகளின் வயது முறையே 1,2 மற்றும் 3 ( 3 பெண் குழந்தைகள்) 6 மற்றும் 8 வயது (2 ஆண் குழந்தைகள்)
ஆகும்.
ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.