Mai 2, 2024

வெற்றிடத்தை விஜயகாந்த் நிரப்புவார் – பிரேமலதா நம்பிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இன்று காலை ராமேஸ்வரம் வந்திருந்தார். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியும், தனது குடும்பத்தினருக்காகவும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். அதன்பின் இன்று இரவு ராமநாதசுவாமி கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்த அவர் கொரோனா வைரஸ் காரணமாக தொண்டர்களைச் சந்திக்காமல் சென்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தங்களின் பலத்தைத் தெரிவிப்பதில் அனைத்து கட்சியினருக்கும் சிரமமாக இருக்கும். இரு பெரும் தலைவர்கள் இருக்கும்போதே கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த். எனவே அந்தத் தலைவர்களின் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார். அதற்குண்டான தகுதி அவருக்கு மட்டுமே உள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்கவே தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பின்பு விஜயகாந்த் அதுதொடர்பாக அறிவிப்பார் என்றார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் உட்கட்சி பூசல் உள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு குறையும் நிறையும் உள்ளது எனவும் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பின் அவரிடம் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேசலாம் எனவும் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு என்னால் பதில் கூற முடியாது. அவர் தன்னை நிரூபிக்க இன்னும் நிறைய விஷயம் உள்ளது என அவர் தெரிவித்தார்.